அறநிறுவனம் ஒன்றின் இயக்குநர், ஆடவர் ஒருவருடன் கூட்டுச் சேர்ந்து ஏமாற்றுச் செயல்களிலும் மிரட்டிப் பணம் பறித்த சம்பவங்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பெஞ்சி இங் செர் குவெய், 71, ‘தி கோல்டன் டிரீ’ அறநிறுவனத்தின் உரிமையாளராகவும் ‘சூன் தியென் கிங் (துவா கொன்சி)’இன் இயக்குநராகவும் பங்காளியாகவும் இருப்பதாகக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
இங், ஜொவெல் லிம் யி’அன், 39, ஆகிய இருவர்மீதும் மிரட்டிப் பணம் பறித்ததாக ஆளுக்கு மூன்று குற்றச்சாட்டுகளும் ஏமாற்றுக் குற்றச்செயலுக்கு ஆளுக்கு ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
லிம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
அவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்து சென்ற ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஆடவர் ஒருவரை ஏமாற்ற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அந்த ஆடவரிடம் தாங்கள் மக்கள் செயல் கட்சியின் பொதுக் கொள்கை மன்றத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினர்.
அந்த ஆடவரை நன்கொடை வழங்கச் செய்ய, அவர்கள் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அதோடு, 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில், அவர்கள் ஒரு மாது, இரு ஆடவர்கள் என மூவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களின் வழக்கு இம்மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

