2017 முதல் 2024 வரை ஏழு ஆண்டுகளாக, சொத்துச் சந்தை நிர்வாக நிறுவனத்தின் இயக்குநர், நான்கு கூட்டுரிமைக் குடியிருப்புகளின் குடியிருப்பாளர்கள் செலுத்திய பராமரிப்புக் கட்டணத்தில் $400,000க்கும் அதிகமான தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
முகவராக நம்பிக்கைத் துரோகம் இழைத்தது மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயது மாது மீது புதன்கிழமை (டிசம்பர் 17) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஏப்ரல் 2021 முதல் மே 2024 வரை புரிந்ததாகச் சொல்லப்படும் குற்றங்கள் குறித்து பல புகார்களைப் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
நான்கு கண்டோமினிய குடியிருப்புகளின் நிர்வாக முகவர் என்ற முறையில், குடியிருப்பாளர்களின் மாதாந்திர பராமரிப்புக் கட்டணங்களைக் கையாள்வது உள்பட பொறுப்புகளை அவரது நிறுவனம் ஏற்கிறது. மாது, அவரது நிறுவனத்தின் பெயர்களைக் காவல்துறை வெளியிடவில்லை.
அவர் தனது தவறான செயல்பாட்டை மறைப்பதற்காக விலைப்பட்டியல், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலியாக வழங்கியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
நம்பிக்கை துரோகமிழைத்தது நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். ஏமாற்றுக் குற்றத்துக்கு10 ஆண்டுகள்வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். பொய்க் கணக்குகள் தொடர்பான குற்றத்துக்கு 10 ஆண்டுகள்வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

