சிங்கப்பூரில் உடற்குறை உள்ளோருக்கான விளையாட்டுகளுக்கு 2025ஆம் ஆண்டு முதல் பல மில்லியன் வெள்ளி ஆதரவு கிடைக்கவுள்ளது.
புதிதாகத் தொடங்கப்படவுள்ள உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு நிதித் திட்டத்தின்வழி, சமூகத்தினரால் துவங்கப்படும் உடற்குறை விளையாட்டுத் திட்டங்கள் யாவும் தாக்கம் ஏற்படுத்துவதை ஊக்குவிக்க இயலும்.
உடற்குறை உடையோருக்கான விளையாட்டுகள் பெருந்திட்டம் 2024ன் ஒரு பகுதியாக இந்த நிதி விளங்குகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நிறுவனங்கள், தனியார் நன்கொடையாளர்களின் மூலம் குறைந்தது $10 மில்லியன் நிதி திரட்டுவதே இலக்கு.
நன்கொடைத் தொகைக்கு அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி வழங்கும். விளையாட்டுச் சாதனங்களை வாங்குதல், திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்குப் போக்குவரத்து ஆதரவு, பயிற்சி அளிப்பதற்கான கட்டணம் போன்ற கூறுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
சிங்கப்பூர் உடற்குறைசார் விளையாட்டுகள் விருது நிகழ்ச்சி நவம்பர் 20ஆம் தேதி சிங்கப்பூர் மேரியட் டேங் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றபோது உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகள் நிதித் திட்டம் குறித்து கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் அறிவித்தார்.
“விளையாட்டுகளில் உடற்குறையுள்ளோர் ஈடுபடும் வாய்ப்பை அதிகரிப்பது மட்டும் இத்திட்டத்தின் நோக்கமல்ல. பன்முகத்தன்மை, ஏற்கும் தன்மை, உடற்குறைசார் பிரிவில் கூடுதல் பங்காளித்துவத்தை அமைத்தல் போன்றவை தொடர்பில் சமூகத்தினர் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் இலக்காகும்,” என்றார் திரு டோங்.
உடற்குறையுடைய சமூகத்தின் கருத்துகளைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும் இந்தப் பிரிவினருக்குப் பன்முகத் தேவைகள் இருப்பதாகவும் சுட்டிய அமைச்சர், அந்தப் பிரிவினர் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு அளவில் சவால்களை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார்.
“எனவே, முடிந்தவரை உடற்குறையுள்ள உள்ள பலரது தேவைகளையும் நிறைவுசெய்யும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, அவற்றைக் கொண்டாடும் ஒரு விளையாட்டுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதில் அனைத்துத் திறனுடையோரும் விளையாட்டுகளில் ஈடுபட்டு, அவற்றின்வழி வளமுற்று, அதிகாரம் பெற வேண்டும். இதையே இத்திட்டம் அதன் தொலைநோக்காகக் கொண்டுள்ளது,” என்றார் சட்ட இரண்டாம் அமைச்சராகவும் உள்ள திரு டோங்.
தொடர்புடைய செய்திகள்
இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் 3,200ஆக இருக்கும் பங்கேற்பாளர் எண்ணிக்கையை 5,400ஆக அதிகரிப்பதைப் பெருந்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.