கருத்திணக்கமின்மை செயலின்மைக்குக் காரணமாகக்கூடாது: பிரதமர் வோங்

கருத்திணக்கமின்மை செயலின்மைக்குக் காரணமாகக்கூடாது: பிரதமர் வோங்

படம்: சாவ்பாவ்

19 Nov 2026 - 5:17 pm

2 mins read

ஷென்சென்: புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஆசிய-பசிபிக் வட்டாரம் போட்டிப் பொருளியல் குழுக்களாகப் பிளவுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் வட்டாரப் பொருளியல் நாடுகள் தடையற்ற அணுகுமுறையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வியாழக்கிழமையன்று (நவம்பர் 19) சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) தலைவர்களின் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் வோங் உரையாற்றினார்.

பொருளியல் உறவுகள் தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவது அதிகரித்து வருவதால், உலகமயமாதல் மேலும் சவால்மிக்கதாகவும் பிளவுபட்டதாகவும் மாறிவரும் ஒரு காலகட்டத்துக்குள் இவ்வட்டாரம் நுழைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சக தலைவர்களிடம் பேசிய பிரதமர் வோங், ஆசிய-பசிபிக் வட்டாரம் போட்டிப் பொருளியல் குழுக்களாகப் பிரிய அனுமதிக்கக்கூடாது என்றும் அங்குதான் ‘ஏபெக்’ அமைப்புக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒரு சிறிய எல்லைப்புற நகரமாக இருந்த ஷென்சென், உலகளாவிய தொழில்நுட்பம், உற்பத்தி மையமாக உருமாறியிருப்பதை, வெளிப்படைத்தன்மை, புத்தாக்கம், பொருளியல் ஒத்துழைப்பு ஆகியவற்றால் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார்.

உலகத்துடன் இணைந்து செயல்பட்டதாலும் தடையற்ற வர்த்தகக் கொள்கையாலும் செழிப்படைந்த பரந்த ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் வெற்றியையே இந்நகரத்தின் வெற்றியும் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

ஆனால், இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த சூழ்நிலைகளை இனியும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் வோங் கூறினார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மகத்தான வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளன.

இப்பின்னணியில், ‘ஏபெக்’ அமைப்புக்கான மூன்று முன்னுரிமைகளைப் பிரதமர் வோங் கோடிட்டுக் காட்டினார்.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தைத் தடையற்றதாகவும் இணைப்புடனும் வைத்திருத்தல், முழுமையான கருத்திணக்கம் இல்லாதபோதும் ஒத்துழைப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிதல், பொருளியல் ஒத்துழைப்பு வர்த்தகங்களுக்கும் மக்களுக்கும் பயனளிப்பதை உறுதி செய்தல் ஆகியவையே அந்த மூன்று முன்னுரிமைகளாகும்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்சீனாஆசிய பசிபிக்