ஒதுக்கீட்டுத் தோட்டங்களில் செடிகள் திருடப்படுவதாகப் பெருகும் புகார்கள்

2 mins read
09f91eeb-1d8f-4f2f-9bce-83b1155b6360
குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தோட்ட நிலப் பகுதிகளில் ஒன்று. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பூங்காக்களில் உள்ள ஒதுக்கீட்டுத் தோட்டங்களில் செடிகள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தங்களுக்காக ஒதுக்கப்பட்ட தோட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக தோட்ட நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா டி வட்டாரத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒதுக்கீட்டுத் தோட்ட உரிமம் பெற்ற திருவாட்டி ஷரோன் வோங் என்பவர், இதுவரை நான்கு முறை தமது செடிகள் திருடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

2.5 மீட்டர் அகலமும் 1 மீட்டர் நீளமும் கொண்ட தோட்டப் பகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு பதிக்கப்பட்டுள்ள செடிகளைத் தோண்டி எடுப்பதாகவும் சில செடிகளின் இலைகளை சிலர் வெட்டிவிட்டதாகவும் கூறிய அந்தப் பெண்மணி, எலுமிச்சைச் செடி தொட்டி ஒன்றை தூக்கிச் சென்றுவிட்டதாகக் கூறினார்.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள பூங்காக்களில் ஆண்டுக்கு $62.13 செலுத்தி சிறியதொரு பகுதியை தேசிய பூங்காக் கழகத்திடம் இருந்து தற்காலிகக் குத்தகையாகப் பெறலாம்.

அதிகபட்சம் மூன்றாண்டு வரை அவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படும்.

தாங்கள் குத்தகைக்கு எடுத்துள்ள ஒதுக்கீட்டுத் தோட்டத்தை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் நிர்வகிப்போருக்கு கூடுதலாக மூன்றாண்டுக் குத்தகை வழங்கப்படும்.

சிங்கப்பூரின் 28 பூங்காக்களில் உள்ள 32 ஒதுக்கீட்டுத் தோட்டங்களில் 2,400 நிலப் பகுதிகள் குத்தகைக்கு விடப்படுகின்றன.

இந்த மாதமும் சென்ற மாதமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் எட்டு பூங்காக்களில் உள்ள ஒதுக்கீட்டுத் தோட்டங்களைப் பார்வையிட்டனர்.

அவற்றில் வளர்க்கப்படும் செடிகளை யாரும் பறிக்கக்கூடாது என்ற தேசிய பூங்காக் கழகத்தின் எச்சரிக்கை அறிவிப்பு அங்கு வைக்கப்பட்டு இருப்பதை அவர்கள் கண்டனர்.

ஒதுக்கீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகள் அவற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்போருக்குச் சொந்தமானவை என்று கழக்தின் சமூகப் பங்காளித்துவ ஒருங்கிணைப்பு இயக்குநர் வூ வீ மெங் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு தோட்டப் பகுதியில் திருட்டு அல்லது சேதப்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வதாக அடிக்கடி புகார்கள் வந்தால் கழகம் அந்த இடத்தில் சிசிடிவி கண்காணிப்புக் கருவியை நிறுவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்