தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூ சியாட்டிற்கான திட்டங்கள் தொடரும்: அமைச்சர் எட்வின் டோங் உறுதி

2 mins read
3bbd07bb-9aa3-4728-a9e8-ceaa90cbee3a
ஜூ சியாட்டில் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியை மீண்டும் உருவாக்க 2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நன்கொடையைத் திரட்டும்படி திரு எட்வின் டோங் அடித்தளத் தலைவர்களை ஊக்குவித்தார். - படம்: சாவ் பாவ்

ஜூ சியாட் தொகுதி வேறொரு குழுத்தொகுதிக்குச் சென்றாலும் அங்குத் தொடங்கிய பணியைத் தொடரப்போவதாகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அண்மை அறிக்கையின்படி (மார்ச் 12) மரின் பரேட் குழுத்தொகுதியிலிருந்த ஜூ சியாட் தொகுதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் இணைக்கப்படுகிறது.

அது ஏமாற்றமளித்தாலும் ஜூ சியாட் தொகுதி உடைக்கப்படாமல் முழுமையாக இருப்பதால் அதுகுறித்த தமது திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றார் 55 வயது திரு டோங்.

ஜூ சியாட் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான திரு டோங், தாம் வாக்குறுதியளித்த அனைத்தையும் செயல்படுத்தப்போவதாகச் சொன்னார்.

ஜூ சியாட் குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைத் திரு டோங் மாற்றத் தேவையில்லை என்றார்.

இருப்பினும் எஞ்சியுள்ள ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்காகத் தம்மால் பேச முடியாது என்றார் அவர்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங் முடிவுசெய்தவுடன் அந்தக் குழு தேர்தலை முன்னிட்டு களமிறங்கும் என்று திரு டோங் கூறினார்.

மார்ச் 12ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் திரு டோங் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ஜூ சியாட்டில் 10 ஆண்டுகள் சேவையாற்றி இருக்கிறேன். குழுத்தொகுதியைவிட்டு வெளியேறுவது சற்று வருத்தமளிக்கிறது,” என்று திரு டோங் குறிப்பிட்டார்.

மரின் பரேட் குழுத்தொகுதியின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட சில திட்டங்களைத் திரு டோங் நினைவுகூர்ந்தார்.

எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான ‘வீகேர்’ திட்டங்கள், பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்புகள், ரயில் நிலையங்கள், பொது மருந்தகங்கள், உணவங்காடி நிலையங்கள் போன்றவற்றுக்குச் சேவை வழங்கும் இலவசப் பேருந்துகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்ட சில வசதிகள்.

இத்தகைய திட்டங்களை விட்டுவிட்டு வேறோர் இடத்தில் மீண்டும் தொடக்கத்திலிருந்து வருவது வருத்தமளிப்பதாகச் சொன்னார் திரு டோங்.

ஜூ சியாட்டில் இருப்பது போல வெவ்வேறு திட்டங்களைப் புதிய இடத்தில் உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டறியப்போவதாக அவர் கூறினார்.

இருப்பினும், எல்லை மறுஆய்வில் செய்யப்பட்ட மாற்றங்கள் எதிர்பார்த்ததுதான் என்றார் திரு டோங்.

ஜூ சியாட்டில் திரு டோங் கொண்டுவந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று, பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியை மீண்டும் கட்டியெழுப்பியது.

பாலர் பள்ளியைக் கட்டுவதற்காக அடித்தளத் தலைவர்களையும் நன்கொடையாளர்களையும் 2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியைத் திரட்டும்படி அவர் ஊக்குவித்தார்.

குறிப்புச் சொற்கள்