எஸ்ஜி60: 23 உள்ளூர் சுற்றுலாத் தலங்களில் கட்டணக் கழிவு

2 mins read
1ff484c5-7a6a-49d8-b5e0-b532c48c6b45
சிங்கப்பூரில் உள்ள 23 சுற்றுலாத் தலங்களில் கட்டணக் கழிவுகளும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இது வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்த்து அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்ஜி 60 கொண்டாட்டங்களை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள 23 சுற்றுலாத் தலங்களில் கட்டணக் கழிவுகளும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அறிவியல் நிலையம், பறவைகள் மகிழ்வனம், கிஸ்டோபியா, மண்டாய் வனவிலங்குக் காப்பகம், பவுன்ஸ் சாங்கி, ஸ்னோ சிட்டி, சிங்கப்பூர் கம்பிவண்டி, கரையோரப் பூந்தோட்டம் உட்பட 23 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் கட்டணக் கழிவுடன் வேறு பல சலுகைகளும் வழங்கப்படும்.

“உலக நாடுகளை எப்போதும் சிங்கப்பூருடன் இணைக்க வேண்டும். அதன்மூலம் சிங்கப்பூருக்கு மக்கள், வர்த்தக வரவு இருந்துகொண்டே இருக்க வேண்டும். உலக நாடுகளுக்கான ஆசியாவில் ஒரு மையமாக சிங்கப்பூருக்கு இருக்கும் நிலையை வலுப்படுத்த வேண்டும். நமது துடிப்புமிக்க நாட்டுக்கு உலக மக்களை தொடர்ந்து ஈர்க்க வேண்டும்,” என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (மார்ச் 6) நடைபெற்ற வர்த்தக, தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் இதுகுறித்து பேசினார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான அடுத்த அத்தியாயத்தைக் கொண்டாட நாடெங்கும் எஸ்ஜி கொண்டாட்டங்கள் நடைபெறும்.

உள்ளூரில் உள்ள 23 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் கட்டணக் கழிவும் வேறு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டதன் மூலம் அவை குறித்து வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் கவனத்தை அது ஈர்த்து அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு ஏற்படும்.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முயற்சி கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

“இந்த முயற்சிகளின் மூலம், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 17 மில்லியனுக்கும் 18.5 மில்லியனுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஏறத்தாழ $29 பில்லியனுக்கும் $30.5 பில்லியனுக்கும் இடைப்பட்ட வருவாய் சுற்றுப்பயணத்துறைக்குக் கிடைக்கும்,” என்று திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்