மே மாதம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நான்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது கலந்துரையாடப்பட்ட நான்கு முக்கிய விவகாரங்களில், ஹோர்முஸ் நீரிணை தடையற்ற போக்குவரத்து உரிமை உள்ளிட்ட அந்தப் பகுதியின் தற்போதைய நிலைமையும் இடம்பெற்றிருந்தது.
அவர் ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமான், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அங்கு வளைகுடா பங்காளிகளுடன் சிங்கப்பூரின் நீண்டகால உறவுகளை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். வட்டார வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார் என்று வெளியுறவு அமைச்சு புதன்கிழமையன்று (மே 6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தப் பயணத்தின்போது நடந்த கூட்டங்களில், ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் இடையிலான ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்தும் அமைச்சர் விவியன் கலந்துரையாடினார்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அபுதாபியில், துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் சுல்தான் அகமது அல் ஜாபர் ஆகியோரை அமைச்சர் விவியன் சந்தித்தார். மேலும், அவர் அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் தானி பின் அகமது அல் சியூதியையும் சந்தித்தார்.
வர்த்தகம், முதலீடு, விநியோகச் சங்கிலி மீள்திறன, எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல் மற்றும் சிவில் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிங்கப்பூர்-ஐக்கிய அரபு சிற்றரசுகள் முழுமையான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமானில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர் பின் ஹமத் பின் ஹமூத் அல் புசைதி மற்றும் அரச அலுவலக அமைச்சர் சுல்தான் பின் முகமது அல் நோமானி ஆகியோரை அமைச்சர் விவயன் சந்தித்தார்.
அங்கு, மார்ச் 7, 8ஆம் தேதிகளில் மஸ்கட்டிலிருந்து சிங்கப்பூருக்கு மக்களை அழைத்து வரும் இரண்டு விமானங்களை ஓமான் ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக சிங்கப்பூர் சார்பாக அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பிற இருதரப்பு பிரச்சினைகளுடன் தளவாடங்கள், எரிசக்திப் பாதுகாப்பு, கடல்சார் நிர்வாகம் மற்றும் மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சவூதி அரேபியாவில் அந்நாட்டில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவூத்தை அமைச்சர் விவியன் சந்தித்தார். மார்ச் 10, 12ஆம் தேதிகளில் ரியாத் மற்றும் ஜெட்டாவிலிருந்து சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவிய சிறப்பு விமானங்களை விரைவாக ஏற்பாடு செய்ததற்காக சவூதிக்கு டாக்டர் விவியன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கத்தாரில் அந்நாட்டின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியையும் துணைப் பிரதமரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான ஷேக் சவுத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானியையும் சந்தித்தார்.
அவர்கள் பொருளியல் மீள்திறன், பாதுகாப்பு மற்றும் உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

