தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் புருணை தலைவர்களையும் அங்குள்ள சிங்கப்பூர் ஆயுதப் படைத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
தற்காப்பு அமைச்சராக திரு சான் மேற்கொண்டிருக்கும் முதல் அதிகாரத்துவ புருணைப் பயணம் இது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) தமது இருநாள் வருகையைத் தொடங்கிய அவர், புருணை ஆட்சியாளர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
பின்னர், புருணை மன்னர் ஹசனல் போல்கியாவை தனியாகச் சந்தித்துப் பேசிய அவர், சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான தனித்துவ உறவின் அவசியத்தை மறுஉறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூரின் 60வது தேசிய தினப் பேரணிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றமைக்காக புருணை மன்னருக்கு திரு சான் நேரில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இரு நாடுகளுக்கும் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
பின்னர், புருணை பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்ததீ பில்லாவையும் திரு சான் சந்தித்து உரையாடினார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் புருணையில் நிகழவிருக்கும் இளம் தலைவர்களின் சந்திப்பைத் தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அப்போது திரு சான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, புருணை தற்காப்பு அமைச்சர் ஹால்பி யூசோஃப்புடன் நடைபெற்ற சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு பற்றி அவர் ஆலோசனை நடத்தினார்.
சிங்கப்பூர், புருணை ஆகிய இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை அப்போது அவ்விருவரும் மறுஉறுதிப்படுத்தினர்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலுக்கு இடையே சிங்கப்பூரும் புருணையும் அணுக்கமாகப் பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்த இரு தற்காப்பு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.
பின்னர், இரு நாடுகளையும் சேர்ந்த 20 இளம் அதிகாரிகள் பங்கேற்ற ‘சிங்கப்பூர்-புருணை இளநிலை தற்காப்பு இருவழித் தொடர்பு’ என்னும் நிகழ்வு நடைபெற்றது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) புருணையின் தெம்புரோங் பயிற்சி முகாமுக்கு வருகையளித்த திரு சான், அங்கிருந்த சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளைச் சந்தித்தார். நன்னம்பிக்கை பயிற்சி ஒன்றுக்காக சிங்கப்பூர் ஆயுதப் படையினர் அந்த முகாமில் தங்கி உள்ளனர்.
சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான அரசதந்திர உறவு அடுத்த ஆண்டு 50ஆம் ஆண்டைத் தொடும் வேளையில் திரு சானின் புருணை வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான அணுக்க, நீண்டகால தற்காப்பு உறவைப் பிரதிபலிப்பதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.