கழன்று விழுந்த குழாயினால் சேற்றில் நனைந்தது கார்

1 mins read
621285c6-5032-4d83-860d-4343c614d56a
எஸ்ஜி ரோடு விஜிலான்டி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், கார் சேற்றில் நனைந்திருந்ததைக் காணமுடிந்தது. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலான்டி/ஃபேஸ்புக்

பெமிம்பின் டிரைவை நோக்கிச்செல்லும் மேரிமவுன்ட் சாலைக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளத்தைச் சென்ற மாத இறுதியில் கடந்துசென்ற கார் ஒன்று மேலிருந்து கொட்டிய சேற்றில் நனைந்தது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 5.45 மணிவாக்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

மேரிமவுன்ட் லேனுக்கும் பெமிம்பின் பிளேசுக்கும் இடையிலான வடக்கு-தெற்கு சுரங்கப்பாதைக்கான கட்டுமானத் தளத்தை அந்தக் கார் கடந்துகொண்டிருந்தது.

சேற்றால் மூடப்பட்டபோதிலும் அந்தக் கார் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருந்ததை எஸ்ஜி ரோடு விஜிலான்டி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் காணமுடிந்தது. சாலையின் ஒரு பகுதியிலும் சேறு கொட்டியது.

தங்கள் வாகனங்கள் சேற்றில் சிக்குவதைத் தவிர்க்க மற்ற வாகனமோட்டிகள் மெதுவாகச் செல்ல வேண்டியிருந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, கழன்று விழுந்த குழாய் ஒன்றினால் காரிலும் சாலையிலும் சேறு கொட்டியதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

அதனால், கட்டுமான ஊழியர்களுக்கோ பொதுமக்களுக்கோ காயங்கள் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட வாகனத்தையும் சாலைப் பகுதியையும் திட்டத்தின் ஒப்பந்ததாரர் உடனடியாகச் சுத்தப்படுத்தினார் என்றும் பேச்சாளர் விளக்கினார்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீண்டும் அத்தகைய சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு அவ்விடத்தில் உள்ள அனைத்து இயந்திரங்களையும் ஒப்பந்ததாரர் சோதித்திருப்பதாகவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.

அனைத்து இயந்திரங்களும் அடிக்கடி சோதிக்கப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் ஒப்பந்ததாரர் உறுதிசெய்வார் என்றும் பேச்சாளர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
கார்கட்டுமானம்