காபிக் கடை ஒன்றில் வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 4) இரவு மூன்று பேரைத் தாக்கியதுடன், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகளையும் தள்ளிவிட்டு இடையூறு விளைவித்த 61 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடோக் நார்த் ஸ்ட்ரீட் 1, புளோக் 204ல் உள்ள காபிக்கடையில் நடந்த தாக்குதல் குறித்து இரவு 7.45 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தது.
முதல்கட்ட விசாரணையில், மது அருந்தியிருந்ததாக நம்பப்படும் அந்த ஆடவர், காபிக் கடையின் பெண் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அரை மணி நேரம் கழித்து வந்த கடை உரிமையாளரிடமும் பிற ஊழியர்களிடமும் அந்த ஆடவர் தகராறு செய்து, அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த மோதலில் உணவக மேசைகள் சரிந்து உணவுகளும் தட்டுகளும் சிதறின. பெண் ஊழியர் ஒருவரின் உதட்டில் ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும், மற்றொரு ஊழியரால் கையை உயர்த்த முடியாமல் போனதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மோதலைத் தடுக்க முயன்றபோது, அந்த ஆடவர் இரு அதிகாரிகளைத் தள்ளிவிட்டதுடன், ஒருவரது கண்ணாடியையும் கீழே தட்டிவிட்டார். மேலும், ஓர் அதிகாரியை வசைபாடி, கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அங்கிருந்த லாக்சா கடை உரிமையாளர் உட்பட சிலர் அதிகாரிகளுக்கு உதவி செய்து, அந்த ஆடவரைக் கீழே தள்ளிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர்.
அச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்ற இருவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்ட போதிலும், அவர்கள் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டனர்.
அந்த ஆடவர் வழக்கமாக அக்கடைக்கு வரும் அமைதியான வாடிக்கையாளர் என்றும், மதுபோதை அல்லது மன அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றும் அங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியரின் பணியைத் தடுத்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணை தொடர்கிறது.


