சிங்நெட் மின்னஞ்சல் சேவையில் இடையூறு; இணையத் தாக்குதல் இல்லை

சிங்நெட் மின்னஞ்சல் சேவையில் இடையூறு; இணையத் தாக்குதல் இல்லை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 5:19 pm

2 mins read

சிங்நெட் மின்னஞ்சல் சேவைகளில் நவம்பர் 18ஆம் தேதி காலையில் இடையூறு ஏற்பட்டது.

நண்பகல் வாக்கில் முழுச் சேவையும் வழக்கநிலைக்குத் திரும்பியது. அதற்கு முன்னர், பயனீட்டாளர்கள் சிலர் மின்னஞ்சல் கணக்குகளை அணுக முடியாமற்போனதாகத் தெரிவித்தனர்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை வழங்குநரிடம் ஏற்பட்ட ‘கட்டமைப்புச் சிக்கல் காரணமாக’ இந்தத் தடங்கல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் அதுபற்றிக் கேட்டதற்கு, சிங்நெட்டின் தாய் நிறுவனமான சிங்டெல் அவ்வாறு பதிலளித்தது.

“இது இணையத் தாக்குதல் அன்று,” என்றும் சிங்டெல் மேலும் கூறியது.

முற்பகல் 11 மணியளவில் பயனீட்டாளர்கள் சிலர் மின்னஞ்சல் கணக்குகளை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். முற்பகல் மணி 11.08க்கு ஃபேஸ்புக் பதிவொன்றில், இப்பிரச்சினை குறித்து அறிந்திருப்பதாகவும் பொறியாளர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் சிங்டெல் கூறியிருந்தது.

பிற்பகல் மணி 12.13க்கு வெளியிட்ட பதிவில், சேவைகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதை நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சிரமத்திற்குச் சிங்டெல் வருத்தம் தெரிவித்தது.

இடையூறால் எத்தனை சிங்நெட் மின்னஞ்சல் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இணையச் சேவைத் தடைகளைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் தளத்தின்படி, காலை 9.30 மணியளவில் பிரச்சினைகள் தொடங்கின. காலை 10.30 மணியளவில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி, நண்பகல் வாக்கில் குறைந்தன.

சிங்கப்பூரின் முதல் பொது இணையச் சேவையாக 1994ஆம் ஆண்டு ஜூலையில் சிங்டெல்லால் சிங்நெட் தொடங்கப்பட்டது. அவற்றின் முகவரிகள், ‘@singnet.com.sg’ என முடியும்.

இதற்கு முன்னர், இம்மாதம் 12ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட உலகளாவிய தொழில்நுட்பக் கோளாற்றால் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் மில்லியன்கணக்கான பயனீட்டாளர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக அவுட்லுக், டீம்ஸ், ஒன்டிரைவ், ஷேர்பாயின்ட் ஆகிய சேவைகளை அணுக முடியாமல்போனது.

தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று மைக்ரோசாஃப்ட் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்