என்95 முகக்கவசங்கள் விநியோகம்; குளிரூட்டப்பட்ட அறைகள் திறப்பு

காற்றின் தரம் மோசமடைந்ததால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை

என்95 முகக்கவசங்கள் விநியோகம்; குளிரூட்டப்பட்ட அறைகள் திறப்பு

1 of 2
படம்: சாவ்பாவ்
படம்: பெரித்தா ஹரியான்

14 Oct 2026 - 8:05 pm

2 mins read

சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்து வரும் வேளையில், தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு புதன்கிழமை (அக்டோபர் 14) முதல் என்95 முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்றும் குடியிருப்பாளர்கள் புகைமூட்டத்திலிருந்து தப்பிக்க சமூக மன்றங்களிலும் சில குடியிருப்பாளர் குழு நிலையங்களிலும் குளிரூட்டப்பட்ட அறைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை பிற்பகலில் காற்றின் தரம் மோசமடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீவின் மேற்குப் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆக அதிகமாக 284ஆகப் பதிவாகியது. மத்திய, கிழக்கு, தெற்குப் பகுதிகளிலும் புகைமூட்டம் மோசமடைந்தது.

24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200க்கும் அதிகமாகி ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ வரம்பை எட்டக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் முகக்கவச விநியோகத்தைத் தொடங்கியுள்ளது என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் கழகத்தின் அடித்தள அமைப்புகள் தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு என்95 முகக்கவசங்களை விநியோகிக்கத் தொடங்கும். முதியோர், கர்ப்பிணிகள், சிறுவர்கள், பதின்ம வயதினர் ஆஸ்துமா போன்ற மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் அடங்குவர்.

இத்துடன், 37 பொதுப் போக்குவரத்து மையங்களிலும் சமூகச் சேவை அலுவலகங்களிலும் தானியங்கி முகக்கவச விநியோக இயந்திரங்களும் வைக்கப்பட்டிருக்கும்.

தகுதிபெறும் ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து இரண்டு முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தகுதிபெறுபவர்கள் சார்பாக அவர்களது அடையாள அட்டையைப் பயன்படுத்தி அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் அவர்களுக்காக முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினர், நீல, ஆரஞ்சு நிற சாஸ் அட்டை வைத்திருப்போர், மருத்துவக் கட்டண விலக்கு அட்டை வைத்திருப்போர், ‘காம்கேர்’ சமூகப் பராமரிப்பு உதவி பெறுவோர், கர்ப்பிணிகள், 7 முதல் 16 வயது வரையிலான சிறுவர்கள், ஆஸ்துமா போன்ற உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோர் முகக்கவசங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

கர்ப்பிணிகள், சிறுவர்கள், உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் மக்கள் கழகத்தின் சமூக மன்றங்கள் போன்ற இடங்களில் மட்டுமே முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காற்றின் தரம் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ பிரிவில் இருந்தால் முதியோர், கர்ப்பிணிகள், நாள்பட்ட இதய அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்ல நேரிட்டால் என்95 முகக்கவசங்களை அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இருப்பினும், தீவிர நுரையீரல் அல்லது இதயப் பிரச்சினை உள்ளவர்கள் என்95 முகக்கவசத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 300க்கு மேல் அதிகரித்து ‘ஆபத்தான’ நிலையை எட்டினால் சமூக மன்றங்களிலும் சில குடியிருப்பாளர் குழு நிலையங்களிலும் திறக்கப்படும் குளிரூட்டப்பட்ட அறைகள் இயங்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படும்.

புதன்கிழமை (அக்டோபர் 14) இரவு 9 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 203ஆகப் பதிவானது. வடக்குப் பகுதியில் 72ஆகவும் மத்தியப் பகுதியில் 125ஆகவும் தெற்குப் பகுதியில் 88ஆகவும் கிழக்குப் பகுதியில் 97ஆகவும் பதிவாகியது. இந்த நிலவரம் அவ்வப்போது மாறியபடியே நீடித்தது.

குறிப்புச் சொற்கள்