வழக்குகளில் மேல்முறையீடு செய்யும்போது தங்களது முன்னாள் வழக்கறிஞர்களைக் குற்றம் சொல்லும் கவலை தரும் போக்கு அதிகரித்து வருவதாக மேல்முறையீட்டு நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.
முன்னாள் வழக்கறிஞர்கள் மீது கடுமையான புகார்களைக் கூறுவோர் அது குறித்து நம்பகமான வகையில் சாட்சியம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டீவன் சோங் என்ற அந்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விளக்கினார்.
முகம்மது சாலே ஹமிது என்பவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பின் அவர் தனது வழக்கை சீராய்வு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் நீதிபதி தமது எழுத்துபூர்வமான தீர்ப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மெத்தஃபெத்தமின் என்ற போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக முகம்மது சாலேக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவரது மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு 2020ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து முகம்மது சாலே தமது சீராய்வு மனுவில் முன்னாள் வழக்கறிஞர்கள் தனக்கு சாதகமான சாட்சியத்தை முன்வைக்காமல் திறமைக் குறைவான முறையில் மேல்முறையீட்டு வழக்கை நடத்தினர் என்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து கூறிய நீதிபதி சோங், முகம்மது சாலே எழுப்பிய புகார்கள் எதிலும் சாராம்சம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கூறிய திரு சோங், “இதுபோன்ற முன்னாள் வழக்கறிஞர்களுக்கு எதிரான சாராம்சம் அற்ற, விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்ப வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதில்லை,” என்றார்.
இதுபோன்ற நம்பகமான சாட்சியம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்னாள் வழக்கறிஞர்கள் மீது சுமத்துவோர் மீது நீதிமன்றம் சட்டச் செலவுத் தொகையை அபராதமாக விதிக்கும் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நீதிபதி ஸ்டீவன் சோங்கின் இந்தக் கூற்று மற்ற பல நீதிபதிகளால் பல்வேறு வழக்குகளில் தெரிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

