நீண்டகாலத்தில் தனக்குத் தேவையான வளங்களைத் தானே தயாரித்துக்கொள்ளும் இலக்கை நோக்கிச் சிங்கப்பூர் சென்றுகொண்டிருந்தாலும் எரிசக்தி வளங்கள், எரிபொருள் விநியோகிப்பாளர்கள் போன்ற தரப்புகளைப் பன்முகப்படுத்துவதன் மூலம் சிங்கப்பூர் அதன் எரிசக்திப் பாதுகாப்பை நிலைநாட்டத் திடட்மிட்டுள்ளதென எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
பல வழிமுறைகள் ஆய்வு
இந்த அணுகுமுறை, சிங்கப்பூர் பல வழிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் தற்போது இயற்கை எரிவாயுவை அதிகம் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் சூரியசக்தி, இறக்குமதி எரிசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு அணுசக்தி போன்ற முறைகளையும் ஆராய முற்படும்.
அதேநேரம், பல இடங்களிலிருந்து எரிசக்தி இறக்குமதி செய்யப்படுவதையும் சிங்கப்பூர் உறுதிசெய்யும் என்றும் டாக்டர் டான் நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
“எரிசக்தியைப் பொறுத்தவரை வருங்காலத் தலைமுறைச் சிங்கப்பூரர்களுக்கு, தற்சார்புள்ள, நிலையான, நம்பகமான நாடாக இருந்தபடி கட்டுப்படியான விலையில் எரிசக்தியை வழங்கும் நாடாகச் சிங்கப்பூர் விளங்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறோம்,” என்றார் டாக்டர் டான்.
எரிசக்திப் பாதுகாப்பை நிலைநாட்ட நாடு எடுக்கும் முயற்சிகளைப் பற்றி டாக்டர் டான் விவரித்தார். சிங்கப்பூரில் எரிசக்தித் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட அவர் பொறுப்பு வகிக்கும் அமைச்சின் பெயர் கடந்த அக்டோபர் மாதம் மாற்றப்பட்டது.
உலக அளவில் பாதிப்பு
நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழலால் உலக அளவில் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் காரணமாகச் சிங்கப்பூரின் எரிசக்தித் துறை சந்திக்கக்கூடிய சிக்கல்களை அண்மைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் எண்ணெய், எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
எனினும், பல இடங்களிலிருந்தும் பல வழிகள் மூலமாகவும் எரிசக்தியைத் தருவிக்கும் சிங்கப்பூரின் அணுகுமுறை நாட்டுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
இதுவரை காணப்பட்டுள்ள முன்னேற்றம்
தற்போது சிங்கப்பூருக்குத் தேவையான இயற்கை எரிவாயுவில் பாதிக்கும் குறைவான அளவுதான் குழாய்கள் மூலம் பெரும்பாலும் மலேசியாவிலிருந்தும் இந்தோனீசியாவிலிருந்தும் தருவிக்கப்படுகிறது. மாறாக, 2000களின் தொடக்கத்தில் மின்சார உற்பத்திக்குச் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்தும் இந்தோனீசியாவிலிருந்தும் தருவிக்கப்படும் குழாய்வழி எரிசக்தியை அதிகம் சார்ந்திருந்தது.
