விவாகரத்து வழக்கு; முன்னாள் கணவரின் $7.6 மில்லியன் சொத்து முடக்கம்

விவாகரத்து வழக்கு; முன்னாள் கணவரின் $7.6 மில்லியன் சொத்து முடக்கம்

2 mins read
e17552f9-fe2d-4b11-a068-3c38ecc541c2
ஆடவர் தமது முன்னாள் மனைவிக்கு இன்னும் 7.6 மில்லியன் வெள்ளி வழங்காத காரணத்தால் அந்தத் தொகை மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வர்த்தகர் ஒருவர் தமது 18 ஆண்டு கால திருமண உறவை முறித்துக்கொள்ளும் போது தமது முன்னாள் மனைவிக்கு 20 மில்லியன் வெள்ளி நிதியைத் தருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நான்கு ஆண்டுகளில் சிறுசிறு பகுதிகளாக அந்தத் தொகை முன்னாள் மனைவிக்கு வழங்கப்படும் என்று அவர் மணமுறிவு ஒப்பந்தத்தில் கூறியிருந்தார்.

50 விழுக்காட்டுக்கும் மேலான தொகையைக் கொடுத்த அந்த ஆடவர் அதன் பின்னர் தொகையை வழங்கவில்லை.

முன்னாள் கணவரின் நிதி நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்தப் பெண் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

ஆடவர் சிங்கப்பூரில் உள்ள சொத்துகளை விற்பதைத் தடுக்கும் விதமாக அந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஆடவரின் 7.6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆடவர் தமது முன்னாள் மனைவிக்கு இன்னும் 7.6 மில்லியன் வெள்ளி வழங்காத காரணத்தால் அந்தத் தொகை மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

2027 ஜூன் மாதம் வரை மாதாமாதம் அந்தப் பெணண்ணுக்குத் தொகை சென்று சேருவதை உறுதியளிக்கும் வகையில், பாக்கித் தொகையை தமது வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின்போது பெண்ணின் தரப்பு, ஆடவர் துபாய்க்கு இடமாறச் சிங்கப்பூரில் இருக்கும் பங்களாவை விற்பனைப் பட்டியலில் சேர்த்துள்ளார் என்றும் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன் வெள்ளி தொகையை இரண்டாகப் பிரித்து ஆடவர் பயன்படுத்தியுள்ளார் என்றும் முதலில் 5.1 மில்லியன் வெள்ளி, பின்னர் 13.2 மில்லியன் வெள்ளி என்றும் குறிப்பிட்டது.

தனது நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் வெள்ளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் பங்களாவை விற்பனை செய்ததாக ஆடவர் கூறினார். இருப்பினும் கூடுதலான 2.2 மில்லியன் வெள்ளிக்கான செலவை ஆடவர் கணக்கில் காட்டவில்லை.

விவகாரத்து ஒப்பந்தத்தை ஆடவர் மதிக்கவில்லை என்றும் அவரின் நடவடிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

உலோக வர்த்தகத்தில் ஈடுபடும் அந்த ஆடவர் 2004ஆம் ஆண்டு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

2022ஆம் ஆண்டு தம்பதி விவகாரத்திற்காகச் சிங்கப்பூரில் வழக்குப் பதிவு செய்தனர். 2023ஆம் ஆண்டு விவாகரத்து முடிவானது.

விவாகரத்து ஒப்பந்தத்தின்படி 20 மில்லியன் வெள்ளித் தொகையை 2027ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செலுத்த ஆடவர் ஒப்புக்கொண்டார். அதாவது மாதம் 312,500 வெள்ளி ஆடவர் வழங்க வேண்டும். ஆடவர் பலமுறை தொகையை சரியாக வழங்கவில்லை என்பது வழக்கு விசாரணையின் போது அம்பலமானது.

குறிப்புச் சொற்கள்