தன் மகன் எட்டு வயதில் கைப்பேசியில் பார்த்துக்கொண்டிருந்த காணொளி இசையைக் கேட்டு, பின்னர் அந்த இசைக்கேற்றவாறு விரல்களை இசைப்பலகையில் (கீபோர்ட்) நகர்த்தி இசைத்ததைக் கண்ட சேம்ராஜ் ஆசீர் ஜெயராஜ் வியந்துபோனார்.
இளவயதிலிருந்தே தன் மகன் அஷ்வத்துடன் யூடியூப் தளத்தில் இசைக்குழுக்கள் வாசிக்கும் பாடல்களைக் கேட்பது திரு ஆசீருக்கு வழக்கம்.
ஆனால், மகனுக்கு இத்தகைய ஆற்றல் இருக்கும் என்று அறியாமல் இருந்த ஆசீர், அதைக் கண்டு வியந்து போனாலும் மறுபுறம் நெகிழவும் செய்கிறார்.
தற்போது 14 வயதாகும் அஷ்வத், ஆசீர், 48 - அஜிதா மெர்லின் எட்வர்ட், 45, இணையருக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் கழித்துப் பிறந்த செல்ல மகன்.
அஷ்வத் ஒரு வயதை தாண்டிய பிறகு பெற்றோர் இருவரும் மகனின் வளர்ச்சியில் சற்று மந்தநிலை இருப்பதைக் கவனித்தனர். மருத்துவப் பரிசோதனை முடிவில் அஷ்வத்துக்கு மதியிறுக்கம் (Autism) இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
“மகனுக்கு மதியிறுக்கம் உள்ளதைக் கேள்விப்பட்டவுடன் தொடக்கத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் பின்னர் நானும் என் மனைவியும் அதை நேர்மறையாகப் பார்க்கத் தொடங்கினோம். எங்கள் முழுக் கவனமும் அஷ்வத்திடமே இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை,” என்றார் திரு ஆசீர்.
“அஷ்வத்திற்குப் பேச்சு சரளமாக வராது. நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியும். அஷ்வத் எங்களுக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு. அவன் மிகவும் பொறுமையானவன்; நாங்கள் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள்வான்,” என வார்த்தைகளால் மகனை வருணித்தார் தாயார் அஜிதா.
வீட்டிலும் தேவாலயங்களிலும் அடிக்கடி வழிபாட்டுப் பாடல்கள் பாடுவது, இசைக்கருவிகள் வாசிப்பது, திருச்சபை இசைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பது என, திரு ஆசீரும் அவருடைய மனைவியும் இசையுடன் பின்னிப் பிணைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இருந்தாலும், ஆறாண்டுகளுக்கு முன்னர் எவ்விதப் பயிற்சியுமின்றி அஷ்வத் தானாகவே சரியான இசைக்குறிப்புகளுடன் இசைப்பலகையில் வாசித்த தருணம் இன்னும் பெற்றோரின் மனத்தில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.
“அஷ்வத் பின்னர் புத்தகங்களில் இருக்கும் கேலிச்சித்திரங்களையும் பார்த்து இசைக்கத் தொடங்கினார். அதையும் கண்டு நாங்கள் வியப்பில் மூழ்கினோம். மற்ற பிள்ளைகளைகளுடன் ஒப்பிடுகையில் அஷ்வத் சற்று வேறுபட்டாலும், நானும் என் மனைவியும் அஷ்வத்தின் ஆற்றலை ஒரு வரமாகக் கருதுகிறோம்,” என புன்முறுவலுடன் சொன்னார் திரு ஆசீர்.
இசைப்பலகை, பியானோ, ஆர்கன், ஹார்மோனியம், ஹார்மோனிகா, பியானிகா எனப் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து அசத்துகிறார் அஷ்வத்.
அஷ்வத் இசையில் இன்னும் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்குப் பயிற்சி வழங்கப்படும் இசைப் பள்ளியில் இசைக்கருவிகள் வாசிக்கவும், இசையமைக்கவும் கற்று வருகிறார்.
அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் திருச்சபை இசைக்குழுவினருடன் கைகோத்து வீடு வீடாகச் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி மகிழ்வித்தபோது, அஷ்வத் பாடல்கள் பாடவில்லை என்றாலும், இசைக்கருவிகளை வாசித்து கொண்டாட்ட உணர்வை மெருகூட்டினார்.
அதிகாலை 3.30 மணியளவில் பாடல்களைப் பாடி முடித்த போதிலும், சளைக்காமல், மிகுந்த உற்சாகத்துடன் இசைக்கருவிகளை மகன் வாசித்ததைப் பெருமிதத்துடன் கூறினார் ஆசீர்.
“புதிய ஆண்டில் அஷ்வத்துக்கு அனைத்தும் எப்பவும் போல நன்றாக அமைய வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இசை பயணத்தில் அஷ்வத் மென்மேலும் வளர்ச்சி காண வேண்டும். மேலும், சவால்கள் வந்தாலும் துவண்டு போக வேண்டாம் என்பதை இதர பெற்றோருக்கு நாங்கள் புத்தாண்டு வாழ்த்தாகக் கூற விரும்புகிறோம்,” என்று அனைவருக்கும் வாழ்த்துகளைத் தம்பதியினர் முகமலர்ச்சியுடன் தெரிவித்து கொண்டனர்.

