அரசு அதிகாரிகள் என்று கூறி தொலைபேசி வழி மோசடிக்காரர்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் இருக்கும் அபாயத்தை உணர்ந்து அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்த மோசடிக்காரர்கள், பெரும்பாலும் உள்ளூர் தொலைபேசி எண்களைக் கொண்டு தாங்கள் அரசாங்க அதிகாரிகள் என்ற போர்வையில் வருவர்.
அந்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்படுவோரின் சிங்கப்பூர் தொலைபேசி எண் மலேசிய வேலை விளம்பர மோசடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவர். பின்னர், தொலைபேசி உரையாடலைப் போலியாக மலேசியாவில் உள்ள அனைத்துலக காவல்துறை அதிகாரியிடம் மாற்றிவிடுவர் என்று ஜனவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இதைத் தொடர்ந்து மோசடியில் சிக்குபவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி விவரங்கள் ஆகியவற்றை மோசடிக்காரர்கள் கேட்பர் அல்லது மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றிவிடக் கூறுவர் என்று காவல்துறை விளக்கியது.
இதுபற்றிக் கூறும் காவல்துறை, எந்த அரசு அதிகாரியும் மேற்குறிப்பிடப்பட்ட எந்தச் செயலையும் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தது. அத்துடன், அரசு தொடர்பில்லாத கைப்பேசிச் செயலியை எந்த அரசு அதிகாரியும் பதிவிறக்கம் செய்யச் சொல்ல மாட்டார் என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியது.
மோசடிகள் குறித்து மேல்விவரங்கள் அறிய https://www.scamshield.gov.sg/ என்ற இணையப்பக்கத்துக்கு செல்லலாம் அல்லது ‘ஸ்கேம்ஷீல்ட்’ உதவி தொலைபேசி அழைப்பு எண் 1799 உடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் மோசடி தொடர்பாக எவரும் இணையபக்கமான https://www.police.gov.sg/i-witness புகாரளிக்கலாம் அல்லது காவல்துறை அவசர அழைப்பு எண் 1800-255-0000 உடன் தொடர்பு கொள்ளலாம்.

