தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புறாக்கள், காகங்களைப் பிடிப்பதற்கான பொறிகளைச் சேதப்படுத்தினால் சிறைத்தண்டனை

பறவைகளுக்கான பொறிகளைச் சேதப்படுத்த வேண்டாம்: சண்முகம்

2 mins read
3a18a5ca-1610-44f4-a29e-1a2f85904c96
நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் உரையாற்றினார். - படம்: தமிழ் முரசு
multi-img1 of 2

பொது இடங்களில் புறாக்களையும் காகங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளைச் சேதப்படுத்துவோர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படக்கூடும் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் கூறியுள்ளார்.

தேசியப் பூங்காக் கழகம் பொது இடங்களில் வைக்கும் பாதுகாப்புக் கேமராக்களைச் சேதப்படுத்தி பொறிகளில் சிக்கும் பறவைகளை விடுவித்ததற்காக இதற்குமுன் பிடிபட்டோர் எச்சரிக்கையுடன் விடப்பட்டனர்.

ஆனால் அதே போன்ற நடவடிக்கை இனியும் தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது குற்றம் சுமத்தி சிறைத் தண்டனை விதிக்கப்படுவது குறித்து ஆராயப்படுவதாகத் திரு சண்முகம் கூறினார்.

த கம்யூனிட்டி ஸ்குவேர் @ நீ சூன் லிங்கில் (The Community Square @ Nee Soon Link) நடைபெற்ற வருடாந்தர பசுமை விழாவில் திரு சண்முகம் உரையாற்றினார்.

“கடந்த ஆண்டு மட்டும் புறாக்கள் தொடர்பில் 900 புகார்களை அதிகாரிகள் பெற்றனர். இயற்கையுடன் நாம் ஒன்றி வாழ வேண்டும். ஆனால் புறாக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகப் பெருகும்போது அதைக் கட்டுப்படுத்தித்தான் ஆகவேண்டும்,” என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.

அளவுக்கு அதிகமான புறாக்கள் சுகாதாரத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று சுட்டிய அவர், “பொது இடங்கள், உணவங்காடிகளில் அவை எச்சங்களை விட்டுச் செல்கின்றன. எனவே அவற்றுக்கு உணவளிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

பொது இடங்களில் கூடும் புறாக்கள் எச்சங்களை விட்டுச் செல்கின்றன.
பொது இடங்களில் கூடும் புறாக்கள் எச்சங்களை விட்டுச் செல்கின்றன. - படம்: தமிழ் முரசு

புறாக்களுக்குச் சிலர் நல்லெண்ணத்தில் உணவளிப்பது பெரும்பாலானோருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதாக சொன்ன அவர், புறாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முற்படும் அதிகாரிகளின் நடவடிக்கை அதிருப்தி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பேசலாம் என்றார்.

“புறாக்கள், காகங்கள் ஆகியவற்றால் ஏற்படும் சிரமத்துக்குத் தீர்வுகாணும்படி பெரும்பாலோர் அரசாங்கத்தைக் கேட்கின்றனர். அதன் அடிப்படையில்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். மக்கள் ஒத்துழைக்கவேண்டும்,” என்று திரு சண்முகம் கேட்டுக்கொண்டார்.

- படம்: தமிழ் முரசு

ஜூலை 19ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற நீ சூன் பசுமை விழாவில் நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

பள்ளிகள், அரசாங்க அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் என 24 பங்காளி அமைப்புகள் பசுமை முயற்சிகளை மேற்கொள்ள முற்படும் மக்களுக்குத் தங்கள் யோசனைகளை முன்வைத்தன.

சமையற்கலையில் திறன் வாய்ந்த குடியிருப்பாளர்களின் 15 சமையல் குறிப்புகள் அடங்கிய நீ சூன் சமூக சமையல் நூலும் வெளியிடப்பட்டது.

சமையற்கலையில் திறன் வாய்ந்த குடியிருப்பாளர்களின் 15 சமையல் குறிப்புகள் அடங்கிய நீ சூன் சமூக சமையல் நூலும் வெளியிடப்பட்டது
சமையற்கலையில் திறன் வாய்ந்த குடியிருப்பாளர்களின் 15 சமையல் குறிப்புகள் அடங்கிய நீ சூன் சமூக சமையல் நூலும் வெளியிடப்பட்டது - படம்: தமிழ் முரசு
குறிப்புச் சொற்கள்