சிங்கப்பூரில் மாண்ட இந்தியப் பாடகர் ஸுபீன் கார்க்கின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதால் மக்கள் ஊகித்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் காவல்துறை கேட்டுகொண்டுள்ளது.
சிங்கப்பூர் மரண விசாரணை சட்டத்தின்கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், முதற்கட்ட விசாரணையில் பாடகரின் மரணத்தில் எந்தவொரு சூதும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்றும் அது கூறியது.
ஸுபீனின் மரணம் குறித்து இணையத்தில் பரவி வரும் ஊகங்கள் குறித்தும் தவறான கருத்துகள் குறித்தும் தங்களுக்குத் தெரியும் எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், “இந்த வழக்கை அனைத்து கோணத்திலும் விசாரிக்கக் காவல்துறை உறுதிபூண்டுள்ளது. அதற்கு நிறைய அவகாசம் தேவை. சூழ்நிலையை உணர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என அவர்கள் கூறினார்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களைக் காவல்துறை அறிவுறுத்தியது.
வழக்கை முழுமையாக விசாரிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் எனக் கூறிய காவல்துறை, விசாரணையில் வெளிவந்த அனைத்து தகவல்களும் மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றது.
அதற்குப் பிறகு மரண விசாரணை நடத்தலாமா வேண்டாமா என அந்த அதிகாரி முடிவு செய்வார் எனக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நீதித்துறை அதிகாரி ஒருவர் தலைமையில், மரணத்திற்கான காரணம், அது நடந்த சூழல் ஆகியவற்றின் உண்மை தன்மையைக் கண்டறியும் நடைமுறையே விசாரணை எனக் கூறிய காவல்துறை அதிகாரிகள், விசாரணை முடிவடைந்தவுடன் கண்டறிந்த தகவல்கள் அனைத்தும் பொதுமக்களிடம் பகிரப்படும் எனத் தெரிவித்தது.