‘எக்ஸ்டசி’ எனப்படும் ‘எம்டிஎம்ஏ’ போதைப்பொருளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக மருத்துவருக்கும் அவரது நண்பருக்கும் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தலா ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருத்துவரான ரேசன் லீ ரூய் ஷெங், 36, டான் லி மிங், 29, இருவரும் கடந்த 2023 ஆகஸ்ட் 9ஆம் தேதி, சோஃபிடெல் சிங்கப்பூர் செந்தோசா ஹோட்டலில் உள்ள விடுமுறைக்கால விடுதி ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியபோது கைதுசெய்யப்பட்ட 49 ஆடவர்களில் அடங்குவர்.
வழக்கு விசாரணைக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் இவர்கள் மீதான போதைப்பொருள் பயன்பாட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டது. முன்னதாக, 2023 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு நண்பரின் பிறந்தநாள் விருந்தில் பங்கேற்ற லீ, பின்னர் கிளார்க் கீயிலுள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்றபோது டானிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மறுநாள் அதிகாலையில் இருவரும் தனித்தனியாக அந்த விடுதிக்குச் சென்றனர். தகவலின்பேரில் காலை 5.30 மணிக்குச் சோதனை நடத்திய அதிகாரிகளும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் அங்கிருந்து ‘எக்ஸ்டசி’, ‘கெட்டமின்’ உள்ளிட்ட போதைப்பொருள்களையும் உபகரணங்களையும் கைப்பற்றினர்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் பரிசோதனையில், இருவரின் சிறுநீர் மாதிரியில் எக்ஸ்டசி உட்கொண்டதற்கான தடையங்களும் தலைமுடி மாதிரியில் இருவரும் எக்ஸ்டசி, கெட்டமின் போதைப்பொருள் உட்கொண்டதும் கண்டறியப்பட்டது. தங்கள் பானங்களில் போதைப்பொருள் கலக்கப்பட்டதாக இவர்கள் வாதிட்ட போதிலும், அதனை நிரூபிக்கத் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் தண்டனை விதித்தது.
இவர்கள் இருவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளனர்.


