தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் உள்ளிட்ட கிளைகளில் ‘டாக்டர் எனிவேர்’ 8% ஆட்குறைப்பு

2 mins read
7f319e7c-81bc-4eb0-9b48-7af933b02518
‘டாக்டர் எனிவேர்’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லிம் வாய் மன் ஆட்குறைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பத்து நாள்களுக்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் அறிவித்தார். - படம்: சாவ் பாப்

தொலைமருத்துவ நிறுவனமான ‘டாக்டர் எனிவேர்’ (Doctor Anywhere) 45 பேரை ஆட்குறைப்பு செய்திருப்பதாக அறிவித்து உள்ளது.

அது அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 8.1 விழுக்காடு.

செலவு குறைப்பு மற்றும் பணிகளின் சீர்திருத்தம் காரணமாக அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ‘டாக்டர் எனிவேர்’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லிம் வாய் மன் தெரிவித்து உள்ளார்.

ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் அவர் அறிவித்தார். மறுநாள் நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்திலும் அவர் அதுபற்றிப் பேசினார்.

இருப்பினும், எந்தெந்த பொறுப்புகளில் வேலை செய்தோர் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

பாதிக்கப்படுவோரில் 20 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் அதன் சிங்கப்பூர் கிளையில் வேலை செய்தோர் என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

சிங்கப்பூரில் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் தொழில்நுட்பம் மற்றும் நிதிப் பிரிவுகளில் வேலை செய்தோர் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

ஆட்குறைப்புக்கு ஆளானோரில் மற்றவர்கள் மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வட்டாரச் சந்தைகளின் ‘டாக்டர் எனிவேர்’ கிளையில் பணியாற்றியோர்.

பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு உதவ நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறிய பேச்சாளர், சட்டம் அனுமதித்துள்ள சலுகைகளைக் காட்டிலும் மேம்பட்ட அனுகூலன்களை அவர்களுக்கு வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

“வேலையில் இருந்து காலத்திற்கு ஏற்ற ஊதியம், ஆட்குறைப்பு அறிவிப்பு காலத்திற்குரிய ஊதியம், எஞ்சிய விடுப்புக்கான ரொக்கம், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்புச் சலுகை போன்றவை, தகுதி அடிப்படையில் வழங்கப்படும்,” என்றார் அவர்.

தேவைப்படுவோருக்கு குடிநுழைவு உதவிகளை தமது நிறுவனம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் தொடர்பாகக் கருத்துக் கேட்க தேசிய தொழிற்சங்க காங்கிரசை (NTUC) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது.

குறிப்புச் சொற்கள்