ஈசூன் எம்ஆர்டி நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 63 வயது ஆடவரைக் காப்பாற்றினார் கூ டெக் புவாட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான 27 வயது டாக்டர் லிம் ஷி பிங்.
டாக்டர் லிம் அப்போது வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 7.30 மணி அளவில் நிகழ்ந்தது.
ஈசூன் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள மின்படிகளுக்கு அருகில் கூட்டம் கூடியதை டாக்டர் லிம் கண்டார்.
ஆடவர் ஒருவர் தரையில் கிடந்தபடி மூச்சுவிட சிரமப்பட்டதாக டாக்டர் லிம் கூறினார்.
சோதித்துப் பார்த்ததில் அந்த ஆடவருக்கு நாடித் துடிப்பு இல்லை என்று அவருக்குத் தெரியவந்தது.
டாக்டர் லிம் உடனடியாக அவருக்கு ‘சிபிஆர்’ சிகிச்சை வழங்கினார்.
ஆம்புலன்சை அழைக்கும்படி அருகில் இருந்தோரிடம் டாக்டர் லிம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதய இயக்கமீட்பு இயந்திரத்தைக் கொண்டு வருமாறு எஸ்ஆம்ஆர்டி நிலைய மேலாளர் கெல்வின் லியோங் தமது நிலைய ஊழியர்களைப் பணித்தார்.
இதய இயக்கமீட்பு இயந்திரத்தை டாக்டர் லிம் தயார் செய்துகொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட ஆடவருக்குத் திரு லியோங் ‘சிபிஆர்’ சிகிச்சை வழங்கினார்.
இதய இயக்கமீட்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி அந்த ஆடவரின் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தார் டாக்டர் லிம்.
காலை 7.35 மணி அளவில் ஆம்புலன்சின் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர்.
அந்த ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனையின் விபத்து, அவசரநிலை சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே, டாக்டர் லிம் பேருந்தில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார்.
அன்று அவரது வேலை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
கூ டெக் புவாட் மருத்துவமனையின் விபத்து, அவசரநிலை சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் டாக்டர் லிம், அந்த ஆடவருக்குச் சிகிச்சை அளித்தார்.
அந்த ஆடவர் முழுமையாகக் குணமடைந்து ஐந்து நாள்கள் கழித்து வீடு திரும்பினார்.
எம்ஆர்டி நிலையத்தில் முதலுதவி வழங்கியவர் என்று தம்மை அந்த ஆடவரிடம் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்றார் டாக்டர் லிம்.
“அது அவரிடமிருந்து பாராட்டு, நன்றியை எதிர்பார்ப்பதைப்போல ஆகிவிடும். அது எனது சுபாவம் கிடையாது,” என்றார் டாக்டர் லிம்.
மாரடைப்பு ஏற்பட்ட ஆடவருக்கு உதவிய டாக்டர் லிம், திரு லியோங் ஆகியோருடன் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் மூன்று ஊழியர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சமூக உயிர்க்காப்பாளர் விருது வழங்கப்படும்.
எம்ஆர்டி நிலையத்தின் உதவி மேலாளர்கள் நூர் நஸ்ர்ஹத்துல் ஃபில்ஸா அப்துல் மஜித், செல்வி கோவிந்தராஜு, எம்ஆர்டி நிலையத்தின் மூத்த உதவி மேலாளர் நூர்ஷஹாருதீன் மிஸ்னாம் ஆகியோருக்கு விருது வழங்கப்படும்.

