சுகாதார அமைச்சை ஏமாற்றிய மருத்துவருக்கு ஏழு மாதச் சிறை

சுகாதார அமைச்சை ஏமாற்றிய மருத்துவருக்கு ஏழு மாதச் சிறை

2 mins read
88411c8a-20e4-44d6-9801-9cca404c49ce
வோங் சூ வாய். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க திட்டத்தின் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட பொய்யானக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து, சுகாதார அமைச்சை $11,000க்கும் அதிகமாக ஏமாற்றிய மருத்துவருக்கு (வெள்ளிக்கிழமை) ஆகஸ்ட் 30ஆம் தேதி ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பொய்யானக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்த அந்த 53 வயது மருத்துவரின் பெயர் வோங் சூ வாய்.

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டம் குறைந்த வருமான குடும்பங்களின் மருத்துவ, பல் மருத்துவ செலவினங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் அவர் முறைகேடு செய்துள்ளார்.

பிடோக் டே அண்ட் நைட் கிளினிக் என்றும் ஜூரோங் டே அண்ட் நைட் கிளினிக் என்றும் இரு மருந்தகங்களை நடத்தி வந்த அவர், தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.

அவ்விரு குற்றச்சாட்டுகளும் ‘சாஸ்’ திட்டத்தில் வோங், $7,000க்கும் அதிகமானப் பணத்தை ஏமாற்றியதுடன் தொடர்புடையவை.

மேலும் தனது நோயாளிகள் பதிவுகளில் பொய்யான தகவல்களை பதிவு செய்த ஒரு குற்றச்சாட்டையும் அந்த சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டார்.

அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற ஐந்து குற்றச்சாட்டுகளும் தண்டனை வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

‘சாஸ்’ மருத்துவ திட்டத்தை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகக் குழுமமும் தேசிய சுகாதார பராமரிப்பு குழும பலதுறை மருந்தகங்களும் சுகாதார அமைச்சின் சார்பாக 2000ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வந்தன.

இதன் தொடர்பில் வோங் தமது பிடோக் மருந்தகம் சார்பாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தக குழுமத்துடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தாம் சாஸ் திட்டத்தில் பங்கேற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதேபோல் தமது ஜூரோங் மருந்தகம் சார்பாகவும் தேசிய சுகாதார பராமரிப்பு மருந்தக குழுமத்துடனும் வோங் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

பின்னர் 2015ஆம் ஆண்டில் குறைந்தது 40 சந்தர்ப்பங்களில் வோங் சாஸ் வலைத்தளத்தின் மூலம் பொய்யான கோரிக்கைகளை சமர்ப்பித்தார். இதில் சுகாதார அமைச்சு அவரது பிடோக் மருந்தகத்திற்கு $1,755 வழங்கியது.

மேலும், சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவும் வோங் பொய்யுரைத்தார்.

இதேபோல் 2016ஆம் ஆம் ஆண்டு வோங் குறைந்தது 76 சந்தர்ப்பங்களில் பொய்யான கோரிக்கைகளை சமர்ப்பித்து அமைச்சிடம் இருந்து மேலும் $5,872 பெற்றதாக கூறப்படுகிறது.

வோங்கிற்குப் பிணைத்தொகையாக $60,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்