மூப்படையும் மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், சிக்கலான சுகாதாரப் பராமரிப்புச் சவால்களைச் சமாளிக்க தாதியரைத் தலைமைத்துவப் பொறுப்புகளுக்குத் தயார்ப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றின் ஒரு பகுதியாக தாதிமைப் பயிற்சிக்கான முனைவர் படிப்பைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் அத்தகைய முனைவர் பட்டத்திற்கான படிப்பு தொடங்கப்படுவது இதுவே முதன்முறை.
‘தாதிமைப் பயிற்சி முனைவர்’ என்னும் ஈராண்டு பகுதிநேரப் படிப்பு, சுகாதாரப் பராமரிப்பு முறை ரீதியிலான முன்னேற்றத்தை வழிநடத்தவும், சுகாதாரக் கொள்கையை ஊக்குவிக்கவும் தாதியருக்கு அதிகாரமளிக்கும். அத்துடன், தங்களது மருந்தகப் பணியில் ஈடுபட்டவாறே தாதியர் பராமரிப்புச் சேவை வழங்குவதை அந்தப் படிப்பு மேம்படுத்தும். அந்தப் படிப்பின் தரம் அனைத்துலகத் தரத்தோடு ஒத்திருக்கும்.
முனைவர் படிப்புக்கான திட்டத்தை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கி வைத்துப் பேசிய சுகாதார அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங் இந்த விவரங்களை வெளியிட்டார்.
சுகாதாரப் பராமரிப்புக்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையிலும் உலகளாவிய தாதியர் பற்றாக்குறை நிலவும் வேளையிலும் தாதியரை வேலைக்கு எடுத்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது சிங்கப்பூருக்கு முக்கியமானது என்றார் அவர்.
“தாதியருக்கான தேவை இன்னும் மாறிக்கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அது வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. மூப்படையும் மக்கள்தொகையை நாம் கொண்டிருப்பதும் நோயாளிகளில் மூத்தோர் விகிதம் அதிகரிப்பதும் அதற்கான காரணங்கள்.
“நோயாளிகள் வயதாகும்போது வழக்கமான பராமரிப்புகளைக் காட்டிலும் பலதரப்பட்ட, சிக்கலான சூழல்களைச் சிறப்பான முறையில் நிர்வகிக்கும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அவர்களுக்கு அதிகம் தேவைப்படும்,” என்றார் திரு ஓங்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், தாதியருக்கான மூன்று புதிய பட்டமேற்படிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது. சமூக சுகாதாரம், தீவிரப் பராமரிப்பு, தொற்றுநோய்க் கட்டுப்பாடு போன்றவற்றில் தாதியருக்கான நிபுணத்துவத்தை மேம்படுத்த அந்தப் படிப்புகள் கைகொடுக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தாதியர் தினத்தையொட்டி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள தாதிமைப் படிப்புக்கான ஏலிஸ் லீ மையம் தனது 20வது ஆண்டு விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடியது.