உலகக் கிண்ணப் போட்டியின்போது உடல்நலத்தில் கவனம் தேவை: மருத்துவர்கள்

உலகக் கிண்ணப் போட்டியின்போது உடல்நலத்தில் கவனம் தேவை: மருத்துவர்கள்

3 mins read
144d3268-af85-40dc-9c34-91387481a138
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் காண ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள் தங்களது உடல்நலத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைக் காண உலகெங்கிலும் உள்ள காற்பந்து ரசிகர்கள் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

இம்முறை உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 39 நாள்களுக்கு நடைபெறவுள்ளன. இது 2022ஆம் ஆண்டு தொடரைவிட 10 நாள்கள் கூடுதலாகும்.

சிங்கப்பூர் நேரப்படி போட்டிகள் பெரும்பாலும் அதிகாலை 3 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளதால், ரசிகர்களின் இயல்பு வாழ்க்கையிலும் தூக்க நேரத்திலும் பெரும் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

போட்டிகளைக் காண்பதற்காக ரசிகர்கள் தங்களின் தூக்க நேரத்தைத் தியாகம் செய்யத் துணிந்தாலும், போட்டி ஒரு மாதத்துக்கும் அதிகமாக நீடிப்பதால் அது அவர்களது உடல்நலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது போன்ற முக்கியக் காற்பந்துப் போட்டியின்போது சோர்வு, கடுமையான தலைவலி, , மன அழுத்தம் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளால் அவதியுறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வொவீனா மருத்து நிலையத்தில் உள்ள ‘ஹெல்த்வே’ நிறுவனத்தைச் சேர்ந்த குடும்ப மருத்துவரான டாக்டர் ஜான் செங் தெரிவித்துள்ளார்.

போதிய தூக்கமின்மை, முறையற்ற உணவுப் பழக்கம், கெஃபின் மற்றும் மதுபானங்களை அதிகமாக உட்கொள்ளுதல், உடலுழைப்புக் குறைவு போன்றவற்றால் ஏற்கெனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகள் மேலும் மோசமடைவதாகப் பார்க்வே ஷென்டன் மருத்துவ இயக்குநர் டாக்டர் லிம் வீ பெங் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இதயம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பதற்றம், ஒற்றைத் தலைவலி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இக்காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியாகச் சில இரவுகள் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத் தூக்கத்தை இழந்தாலும் அது ஒருவரின் கவனிப்புத் திறன், நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும் என்று நோபல் இஎன்டி நிலையத்தைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் ஃபுங் சாக் யுவென் கூறுகிறார்.

எனவே, ரசிகர்கள் அனைத்து ஆட்டங்களையும் பார்க்க முயலாமல், தங்களுக்குப் பிடித்தமான ஆட்டங்களை மட்டும் நேரடி ஒளிபரப்பாகப் பார்ப்பதற்கு முன்னுரிமை அளித்துவிட்டு, மற்ற போட்டிகளின் சிறப்பம்சங்களை மறுஒளிபரப்பில் பார்க்கலாம் என்று அவர் ஆலோசனைக் கூறியுள்ளார்.

மேலும், பகல் நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை குட்டித் தூக்கம் போடுவது சோர்வைக் குறைத்து விழிப்புணர்வை மேம்படுத்தும் என்றும் அதற்கு மேல் தூங்கினால் அது இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேபோல, நள்ளிரவில் நடைபெறும் ஆட்டங்களைக் காணும்போது அவசரமாக விரைவு உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து பழங்கள், தயிர், உப்பு சேர்க்காத பருப்பு வகைகள் மற்றும் எளிய வகை சாண்ட்விச் போன்ற ஆரோக்கியமான உணவுவகைகளை முன்கூட்டியே அளவாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் லிம் பரிந்துரைத்துள்ளார்.

ஆட்டம் விறுவிறுப்படையும்போது ரசிகர்கள் தங்களை அறியாமலேயே அதிகளவு உணவை உட்கொள்ள வாய்ப்புள்ளதால், பெரிய பொட்டலங்களிலிருந்து நேரடியாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவின் அளவைக் கட்டுப்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்