இணையம் வழியான மருத்துவச் சேவையில் குறைபாடுகளை ஆராய்கிறது அமைச்சு

1 mins read
9d85c33a-5a7d-4cbd-8133-6e6501969a79
குறைகள் இருப்பினும் தொலைமருத்துவச் சேவை ஆற்றல் மிக்கது என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையம் வழியாக மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தொலைமருத்துவத் தளங்களில் குறைபாடுகள் இருக்கக்கூடிய சாத்தியத்தை சுகாதார அமைச்சு ஆராய உள்ளது.

கடந்த ஜூலை மாதம், உடல் எடை குறைப்பு தொடர்பாக மருத்துவ ஆலோசனை வழங்கும் அத்தகைய ஏழு தளங்களில் இரண்டில் குறைபாடு இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்ததைத் தொடர்ந்து அமைச்சு ஆய்வில் இறங்கி உள்ளது.

அந்த இரண்டு பிரபல தொலைமருத்துவத்தளங்கள் ஆலோசனை வழங்கியபோது கேமரா இயக்கப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியிருந்தது.

அது பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சு, “மருத்துவர்-நோயாளி உறவை ஏற்படுத்தவும் நேரடி ஆலோசனையில் வழங்கப்படும் அதே தரத்திலான ஆலோசனையை இணையம் வழியாக வழங்கவும், கேமராவை இயக்கநிலையில் வைத்திருப்பது அவசியம்,” என்றது.

அதுபோன்ற விதிமீறல்களை ஆராய வேண்டி உள்ளது என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

“அந்தத் தவறுகள் ஏன் நடக்கின்றன, சலுகைக்கான அம்சங்கள் உள்ளனவா என்பது போன்ற விவரங்களை ஆராய்வோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ், தொலைமருத்துவச் சேவை இரண்டு வழிகளில் நடத்தப்பட வேண்டும். இருவழித் தொடர்பு, நேரலையாகப் பார்ப்பதும் கேட்பதுமான தொடர்பு ஆகியன அவை.

குறைபாடுகள் இருப்பினும் சுகாதாரப் பராமரிப்பு தடையின்றி, கட்டுப்படியாகக்கூடிய அளவில் கிடைப்பதை உறுதிசெய்யக்கூடிய ஆற்றல்மிக்க முறையே தொலைமருத்துவம் என்று அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்