தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆள்மாறாட்ட மோசடிகளைத் தடுக்க ‘மெட்டா’ அளித்த ஆவணங்கள் பரிசீலனை

2 mins read
b5365f94-dc6d-49d7-af59-4d6f4e45c93e
மோசடிகளை நிகழ்த்துவதற்கான சமூக ஊடகத் தளங்களில் ‘ஃபேஸ்புக்’ அதிகம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து நிகழ்த்தப்படும் மோசடிகளைத் தடுக்க மெட்டா நிறுவனம் முன்வைத்துள்ள அம்சங்களை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.

காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கும் வகையில் அந்நிறுவனம் ‘ஓச்சா’ (Ocha) எனப்படும் இணையக் குற்றவியல் தீங்கு தடுப்புச் சட்டச் செயலாக்க ஆணையத்திடம் சில ஆவணங்களை அளித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாவுக்கு சனிக்கிழமை (நவம்பர் 1) பதிலளித்தபோது இந்தத் தகவலை அமைச்சு அளித்தது.

“சிங்கப்பூரின் உத்தரவுகளுக்கு இணங்கும் வகையில் மெட்டா நிறுவனம் அளித்துள்ள ஆவணங்களை ஆணையம் பரிசீலித்து வருகிறது,” என்று உள்துறை அமைச்சு தனது பதிலில் குறிப்பிட்டு உள்ளது.

ஃபேஸ்புக் சமூக ஊடகத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி காவல்துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

இணையக் குற்றவியல் தீங்கு தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தில் முக்கியமான அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் மோசடி விளம்பரங்கள், போலி ஃபேஸ்புக் கணக்குகள் மற்றும் வர்த்தகப் பக்கங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவு வலியுறுத்தியது.

அந்த உத்தரவுக்கு செப்டம்பர் 30க்குள் இணக்கம் தெரிவிக்குமாறு அது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இணங்கத் தவறினால் ஒரு மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இணக்கம் தெரிவிக்கும் வரை நாள் ஒன்றுக்கு $100,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

மோசடிகளைத் தடுக்க சமூக ஊடகத்தளம் ஒன்றுக்குக் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது இதுவே முதல்முறை.

ஃபேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் ஆள்மாறாட்ட மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

போலியாகத் தயாரிக்கப்பட்ட விளம்பரங்களில் முக்கிய அரசாங்க அதிகாரிகளின் படம் அல்லது காணொளியைப் பயன்படுத்தி மோசடி செய்ய மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் தளங்களில் ஃபேஸ்புக் முன்னணி வகிப்பதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்