தோ பாயோ அடுக்குமாடி வீட்டின் மேல்மாடத்தில் அடைத்து வைக்கப்பட்ட ஒரு நாயை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றித் தற்போது தனது பராமரிப்பில் வைத்திருப்பதாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
நாயின் உரிமையாளருடன் கழகம் தொடர்பில் இருப்பதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கழகத்தின் அமலாக்க, விசாரணைப் பிரிவு இயக்குநர் ஜெசிக்கா குவோக் கூறினார்.
‘அலாஸ்கன் மாலமியூட்’ வகையைச் சேர்ந்த அந்த நாய், 35வது தளத்திலுள்ள வீட்டின் சமையலறைக்குப் பின்புறம் அமைந்துள்ள மேல்மாடத்தில் மிகவும் ஆபத்தான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதுகுறித்துக் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 1) தகவல் கிடைத்ததாகக் கழகம் கூறியது.
அதிகாரிகள் உடனடியாக அந்த வீட்டைச் சோதனையிட்டனர். அந்தப் பெரிய நாய் குறுகலான இடத்தில் அடைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர்.
பாதுகாப்பற்ற அந்தச் சூழலையும் நாயின் நலத்தையும் கருத்தில்கொண்டு தேசியப் பூங்காக் கழகம் அதை அங்கிருந்து அகற்றியதாகக் கூறப்பட்டது. தற்போது அது நலமுடன் இருப்பதாகவும் கழகம் கூறியது.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.07 மணிக்கு ‘செயின்டு டாக் அவேர்னெஸ்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட 9 வினாடிக் காணொளியில் அந்த நாய், சன்னலில் தலையை நுழைத்து வீட்டிற்குள் செல்ல முயல்வது தெரிகிறது.
தலையை நுழைக்க முடியாததால் முன்னங்கால்களால் அந்த இடத்தைத் தோண்டுவதுபோல் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்குள் தேசியப் பூங்காக் கழகம் அந்த வீட்டிலிருந்து நாயை அகற்றிவிட்டதாக அதே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநில விலங்கான ‘மாலமியூட்’ வகை நாய்கள் வழக்கமாக 58 முதல் 64 செ.மீ. வரை உயரமானவை. சிங்கப்பூரின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் அவற்றை வளர்க்க அனுமதி இல்லை.
செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் முறையான பராமரிப்பு வழங்குவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று திருவாட்டி குவோக் குறிப்பிட்டார்.
மேலும், அவற்றுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்வதுடன் சரியான இடைவெளியில் உணவு, நீர் ஆகியவற்றை வழங்குவதையும் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.