சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் வீழும் இல்லப் பணிப்பெண்கள்

2 mins read
19ce3f15-9227-43ce-b325-a95cbec09dfb
கோப்புப் படம்: - எஸ்பிஎச்

ஜீனா என்ற இல்லப் பணிப்பெண் 2018ஆம் ஆண்டு இணையத்தில் மலர்ந்த காதல் மூலம் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இணையத்தில் மலர்ந்த அந்தக் காதல் அவளுக்கு கனவுலக வாழ்க்கையை தருவதற்குப் பதில் அவளை அறியாமலேயே அவள் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் கும்பலில் ஈர்க்கப்பட வைத்தது.

இதுபற்றிக் கூறும் அவர், “அவை இன்பமான தருணங்களாகத் தோன்றின. ஆனால், அதைத் தொடர்ந்து அவன் ஒரு நாள் என்னிடம் அவனுக்கு சிங்கப்பூரில் சொந்தத் தொழில் இருப்பதாகவும் தனக்கு உதவி தேவைப்படுவதாகவும் கூறினான்,” என்கிறார்.

ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஜீனா காதலன் வீசிய வலையில் வீழ்ந்தாள்.

தன் காதலனிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அதற்கு அவன், அவளது வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கும் பணத்தை வேறு ஓர் கணக்கிற்கு மாற்ற உதவ வேண்டும் என்று கோரியதாக ஜீனா தெரிவிக்கிறார்.

இதைத் தொடர்ந்து பணத்தை தனது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முயன்ற ஜீனா தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்ததை அறிந்தாள். ஜீனாவை காவல் துறையினர் தொடர்பு கொண்டனர். அவரது முதலாளிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது கணக்கிலிருந்து குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய கிட்டத்தட்ட $30,000 அவருக்கு தெரியாமலேயே வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தெரிய வந்த ஜீனாவின் முதலாளி அவரை வேலையை விட்டு நீக்கினார். அவரைத் திரும்ப அவர் நாட்டுக்கே அனுப்ப உள்ள நிலையில், இல்லப் பணிப் பெண்கள் நிலையத்தை (Centre for Domestic Employees (CDE) ) சேர்ந்த ஒருவர் அவருக்காக மேல்முறையீடு செய்ய முன்வந்ததுடன் அவருக்கு ஆலோசனை வழங்கி ஆதரவாக விளங்கினார்.

சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் குற்றவாளிகள் இப்படித்தான் தனிநபர்களை தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்கிறது சிங்கப்பூர் காவல் துறை.

ஏமாற்றுக் கும்பல்கள் வழக்கமாக தங்களது குற்றச்செயல்களுக்கு துணையாகவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிக்கொள்ளவும் இவ்வாறு தனிநபர் நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்வதாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்