தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூரர் போதைப்பொருள் குற்றங்களுக்காகச் சிங்கப்பூரில் தேடப்பட்டு வந்தவர் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) தெரிவித்தது.
போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின்பேரில் அந்த 41 வயது ஆடவர் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாக சிஎன்பி திங்கட்கிழமை (செப்டம்பர் 7) கூறியது.
அவர் 2023 செப்டம்பரில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும் அதன்பின் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் குடிநுழைவுப் பதிவுகள் காட்டுவதாக சிஎன்பி பேச்சாளர் தெரிவித்தார்.
தாய்லாந்து அதிகாரிகளின் விசாரணைக்குத் தேவையான உதவியை சிஎன்பி வழங்கும் என்றும் அவர் சொன்னார்.
ஜோயல் எனத் தாய்லாந்து காவல்துறையால் அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர், செப்டம்பர் 3ஆம் தேதி பேங்காக்கில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள், போதைப்பொருள் சார்ந்த துணைக்கருவிகள், கிட்டத்தட்ட 200,000 பாட் (S$7,700) ரொக்கம், இரண்டு கைப்பேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
போதைப்பொருள் புழங்கியதாகவும் தாய்லாந்தில் விசா காலத்தைவிட அதிகமாகத் தங்கியிருந்ததாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெடிக்கும் தன்மைகொண்ட வேதிப்பொருள்களையும் அபாயகரமான மற்றப் பொருள்களையும் அவர் வைத்திருந்தது குறித்த விசாரணை தொடர்கிறது.


