பிடித்தமான கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை நேரடியாகக் காணவிரும்பிய ‘பாப்’ இசை ரசிகர்கள் இருவர், இணைய மோசடிக்காரர்களிடம் ஏறக்குறைய $1,500 இழந்தனர்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவியான சாண்ட்ரா (உண்மைப் பெயரல்ல), ஏப்ரலில் நடைபெறவுள்ள புரோனோ மார்ஸ் கலைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற, தொலைபேசி, ‘ஐபேட்’, இரண்டு மடிக்கணினிகள் என நான்கு சாதனங்களைப் பயன்படுத்தியிருந்தார்.
இருப்பினும், அவரது முயற்சிகள் கைகொடுக்கவில்லை. ‘டிக்கெட்மாஸ்டர்’ எனும் அதிகாரபூர்வ விற்பனையாளரிடமிருந்து அவரால் நுழைவுச் சீட்டுகளைப் பெறமுடியவில்லை.
அதனால் அவர் ‘டெலிகிராம்’ தளத்தை நாடினார். அங்கு ஒருவர் அந்த நுழைவுச்சீட்டை $200க்கு விற்றுக்கொண்டிருந்தார். அவர் கட்டணத்தைச் செலுத்தியதும், அந்த விற்பனையாளரை அவரால் தொடர்புகொள்ளமுடியவில்லை. அதன் தொடர்பில் ஒரு மணி நேரத்திற்குள் அவர் காவல்துறையில் புகார் செய்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூர் ராஃபிள்ஸ் இசைக் கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவி வு யோயோ, ‘டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க முயற்சி செய்தபோது ஏமாந்தார்.
அவர் $800 மதிப்பிலான 50 விழுக்காட்டு முன்பணத்தைச் செலுத்திய பிறகு விற்பனையாளர் காணாமல்போனார்.
இணையத்தில் விற்பனைசெய்வோரின் விவரங்களைக் கவனிக்குமாறு திருவாட்டி சாண்ட்ராவும் திருவாட்டி வூவும் கலைநிகழ்ச்சிகளுக்குச் செல்வோருக்கு ஆலோசனை வழங்கினர். குறைவான விலையைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம் என்று திருவாட்டி வூ கேட்டுக்கொண்டார்.

