காப்பிக்கடை ஒன்றுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பத்து நன்கொடை பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. அந்தப் பெட்டிகளில் $20,000க்கும் அதிகமான ரொக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பிக்கடை கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1, புளோக் 134ல் அமைந்துள்ளது.
காப்பிக்கடையை மூடுவதற்கு முன்பாக அப்பெட்டிகளைக் காப்பிக்கடைக்குள் கொண்டு சென்று பூட்டிவைக்க ஊழியர் மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் பெட்டிகளைக் காப்பிக்கடைக்குள் கொண்டு செல்ல மறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெட்டிகள் திருடப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அதிகாலை 4 மணியளவில் வெளிச்சத்திற்கு வந்தது. பல்வேறு லாபநோக்கமற்ற அமைப்புகளுக்காகப் பொதுமக்கள் அளித்த நன்கொடை அந்தப் பெட்டிகளில் சேகரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட ஊழியர் குற்ற உணர்வால் அவதியுறுவதாகவும் காப்பிக்கடையின் நிர்வாகியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் மதர்ஷிப் செய்தித்தளம் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அதிகாலை 5.30 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே கடையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நன்கொடைப் பெட்டிகள் திருடப்பட்டதாகக் கடையின் 72 வயது நிர்வாகி தெரிவித்தார்.

