நடைக்கான கொடை: புதிய கெப்பல் கடலோரப் பாதை திறப்பு

3 mins read
தேசிய பூங்காக் கழகத்தின் தோட்ட நகர நிதிக்குக் கெப்பல் அளித்த நன்கொடையால் உருவான புதிய கடலோரப் பாதை
0217ba2a-432e-4727-924d-e96da7fc1829
கெப்பல் கடலோரப் பாதையில் 90மீட்டர் நீள, உயர்த்தப்பட்ட நடைபாதை உள்ளடங்கும். இப்பாதை இழைவலுவூட்டு நெகிழியால் (Fibre-reinforced polymer) செய்யப்பட்டதால், சூரியன், கடலோரப் பலத்த காற்று, உப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

கெப்பல் பராமரிப்பு அறநிறுவனத்தின் ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடையோடு, லேப்ரடார் இயற்கைப் பூங்காவில் 340 மீட்டர் நீள புதிய ‘கெப்பல் கடலோரப் பாதை’ திறக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஜனவரி 25) காலை நடந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வருகையளித்தார்.

லேப்ரடார் இயற்கை காப்பகத்துக்கும் கடலுக்கும் இடையேயுள்ள கரையோர வனப்பகுதியில் அமைந்திருக்கும் இப்புதிய பாதை, 100 வகையான மரஞ்செடிகொடிகளோடு கண்ணுக்கு விருந்தளிக்கும். அவற்றில் கம்போங் கிளாமுக்குப் பெயரளித்த ‘கிளாம்’ மரம், சிங்கப்பூருக்குச் சொந்தமான கடல் மாம்பழம், ‘காமன் புடாட்’ போன்றவை உள்ளடங்கும்.

வெள்ளை வயிற்றைக் கொண்ட கடற்கழுகு, மரப்பாம்பு போன்ற விலங்குகளையும் கண்டுகளிக்கலாம்.

இப்பாதையில், 250 மீ. நீள இயற்கை சார்ந்த மண்பாதையும் சக்கர நாற்காலிக்கு ஏதுவான 90 மீ. நீள, 1.5 மீ. உயர்த்தப்பட்ட நடைபாதையும் அடங்கும். எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய நீர்மட்டத்தைக் கருத்தில்கொண்டு இது உயர்த்தப்பட்டவாறு கட்டப்பட்டது.

வலப்புறத்தில் 250 மீட்டர் இயற்கை சார்ந்த மண்பாதையும் இடப்புறத்தில் சக்கர நாற்காலி செல்லக்கூடிய 90 மீ. நீள, 1.5 மீ. உயர்த்தப்பட்ட நடைபாதையும்.
வலப்புறத்தில் 250 மீட்டர் இயற்கை சார்ந்த மண்பாதையும் இடப்புறத்தில் சக்கர நாற்காலி செல்லக்கூடிய 90 மீ. நீள, 1.5 மீ. உயர்த்தப்பட்ட நடைபாதையும். - படம்: தேசிய பூங்காக் கழகம்

“உயர்த்தப்பட்ட நடைபாதைமூலம் மக்கள் அழகிய கடலோரக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். 250 மீ. நடைபாதை மக்களைக் கடலோர வனப்பகுதிக்குள் கொண்டுசெல்லும்.

“லேப்ரடார் இயற்கைப் பூங்காவை மேம்படுத்தி மக்களை ஈர்ப்பதன்மூலம், அருகிலுள்ள லேப்ரடார் இயற்கைக் காப்பகத்தை அளவுக்கதிக ஆள் நடமாட்டத்திலிருந்து காக்கிறோம்,” என்றார் தேசிய பூங்காக் கழக இயக்குநர் கண்ணகி சந்திரசேகர்.

உயர்த்தப்பட்ட நடைபாதைமூலம் மக்கள் அழகிய கடலோரக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
உயர்த்தப்பட்ட நடைபாதைமூலம் மக்கள் அழகிய கடலோரக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். - படம்: சாவ்பாவ்

வனப்பகுதி மறுசீரமைப்புச் செயல்திட்டம்வழி சீரமைக்கப்பட்ட கடலோர வனப்பகுதியைப் பல்வகையான வனவிலங்குகள் தம் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் நனவாகிய முயற்சி

“லேப்ரடார் இயற்கைக் காப்பகத்தை மேம்படுத்துவோம் என்றும் அப்பணியில் புதிய கெப்பல் கடலோரப் பாதை, கடலோர வனப்பகுதி சீரமைப்பு ஆகியவை உள்ளடங்கும் என்றும் நான் 2021லேயே கூறியிருந்தேன்.

“நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பாதை மக்களை வரவேற்பதைக் காண்பதில் மகிழ்கிறேன்,” என்றார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

பாசிர் பாஞ்சாங் பூங்காவிற்குக் கூடுதல் இரண்டு ஹெக்டர் பூங்கா நிலத்தை சேர்க்கவுள்ளதாகவும் அதற்கான வடிவமைப்பு ஆலோசனைக்கான ஏலக்குத்தகை விண்ணப்பங்களை தேசிய பூங்காக் கழகம் இவ்வாண்டில் வரவேற்கவுள்ளதாகவும் கூறினார் அமைச்சர்.

மர நடுதல்

2020ல் கெப்பல், ‘ஒரு மில்லியன் மரங்கள்’ இயக்கத்துக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் பூங்காக்களிலும் இயற்கைக் காப்பகங்களிலும் 10,000 மரங்களை நட $3 மில்லியனை நன்கொடையளிக்க உறுதிபூண்டிருந்தது.

அதன் அடிப்படையில், அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கெப்பல் தலைவர்கள், கிட்டத்தட்ட 20 கெப்பல் தொண்டூழியர்கள், பொதுமக்களுடன் 55 மரங்களை சனிக்கிழமையன்று நட்டார்.

அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்), (இடமிருந்து) கெப்பல் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா, கெப்பல் தலைவர் டேனி டியோ, தேசிய பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா, தோட்ட நகர நிதித் தலைவர் டேனியல் ஆகியோர் மரம் நடுகின்றனர்.
அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்), (இடமிருந்து) கெப்பல் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா, கெப்பல் தலைவர் டேனி டியோ, தேசிய பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா, தோட்ட நகர நிதித் தலைவர் டேனியல் ஆகியோர் மரம் நடுகின்றனர். - படம்: ரவி சிங்காரம்

2024 இறுதி வரை, 350 கெப்பல் தொண்டூழியர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட 8,000 மரங்கள் சிங்கப்பூர் முழுவதும் நடப்பட்டுள்ளன.

கெப்பல் நிறுவனத்திலிருந்து அரவிந்த் குமார், கோபி (வலம்). அரவிந்த் குமார் சென்ற ஆண்டும் மரம் நட்டார். கோபி தன் நண்பர்களுடன் நிதி திரட்டி, தமிழகத்தில் மரங்கள் நட்டுவருகிறார்.
கெப்பல் நிறுவனத்திலிருந்து அரவிந்த் குமார், கோபி (வலம்). அரவிந்த் குமார் சென்ற ஆண்டும் மரம் நட்டார். கோபி தன் நண்பர்களுடன் நிதி திரட்டி, தமிழகத்தில் மரங்கள் நட்டுவருகிறார். - படம்: ரவி சிங்காரம்
அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன், தோட்ட நகர நிதியில் பல்லாண்டுகள் சேவையாற்றிவந்துள்ள திருவாட்டி கிர்த்திடா மெக்கானி (நடுவில்). அவர் 2007ல் தான் நட்ட முதல் மரமான கடல் திராட்சையையும் லேப்ரடார் பூங்காவில்தான் நட்டார்.
அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன், தோட்ட நகர நிதியில் பல்லாண்டுகள் சேவையாற்றிவந்துள்ள திருவாட்டி கிர்த்திடா மெக்கானி (நடுவில்). அவர் 2007ல் தான் நட்ட முதல் மரமான கடல் திராட்சையையும் லேப்ரடார் பூங்காவில்தான் நட்டார். - படம்: ரவி சிங்காரம்
காப்பகத்தைப் பாதிக்காமல் இயற்கையை அனுபவிக்க இப்புதிய பாதை வழிவகுக்கிறது. இயற்கையில் செய்த முதலீடு பல தலைமுறையினருக்கும் பயன் விளைவிக்கும்.
தேசிய பூங்காக் கழகத் தோட்ட நகர நிதியில் பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ள திருவாட்டி கிர்த்திடா மெக்கானி.

இளையரின் பங்கு

250 மீ. நடைபாதையோரமாக கற்கள், செடி கொடிகளாலான இயற்கை வடிகால்கள்.
250 மீ. நடைபாதையோரமாக கற்கள், செடி கொடிகளாலான இயற்கை வடிகால்கள். - படம்: ரவி சிங்காரம்

250 மீ. நடைபாதையோரமாக கற்கள், செடி கொடிகளாலான மூன்று இயற்கை வடிகால்கள், தேசிய பூங்காக் கழகத்தின் ‘இயற்கைக்கான இளம் வழிகாட்டிகள்’ திட்டத்தில் பங்கேற்கும் இளையர்களின் ஆலோசனைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை, முன்பு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. அவ்விடங்களின் பின்னணி, எந்த செடிகள் ஏற்புடையதாக இருக்கும், போன்ற அம்சங்களை மாணவர்கள் கருத்தில் கொண்டனர்.

மூலப்பொருள்களில் புத்தாக்கம்

90 மீ. பாதை, இழைவலுவூட்டு நெகிழியால் (Fibre-reinforced polymer) செய்யப்பட்டதால், சூரியன், பலத்த காற்று, உப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட சிமெண்டுடன் மண்ணைப் பிணைத்து செய்யப்பட்டுள்ளது 250 மீ. மண்பாதை. அப்பாதையில் சனிக்கிழமை மழை காரணமாக ஆங்காங்கே சற்று வழுக்கியது. கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததால்தான் இந்நிலை என்றும் சில நாள்களில் மண் இறுகியதும், மழை வந்தாலும் வழுக்காது என்றும் கூறினார் தேசிய பூங்காக் கழக இயக்குநர் கண்ணகி.

குறிப்புச் சொற்கள்