மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதியின் நுழைவாயிலில் மலம் கழித்த ஆடவருக்கு $400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான காணொளி இணையத்தில் பரவிவந்தது.
இந்தியாவைச் சேர்ந்த ராமு சின்னராசா, 37, சுற்றுச்சூழல் பொதுச் சுகாதார (பொதுத் தூய்மை) விதிமுறைகளின்கீழ் பொது இடத்தில் மலம் கழித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
வேலை அனுமதி அட்டையில் சிங்கப்பூர் வந்த ராமு, சென்ற ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மது அருந்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுபோதையில் இருந்த அவர், மறுநாள் அதிகாலை மரினா பே சேண்ட்சில் உள்ள சூதாட்டக் கூடத்திற்குள் நுழைந்தார். சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி காலை 5.20 மணி அளவில் சூதாட்டக் கூடத்தைவிட்டு அவர் வெளியேறினார்.
தொடர்ந்து மதுபோதையில் இருந்த ராமுவால், தாம் இருந்த நிலையில் கழிவறையைத் தேட இயலவில்லை.
காலை 7 மணிவாக்கில் மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதியின் நுழைவாயிலில் ராமு தமது கால்சட்டையைத் தளர்த்திவிட்டு, அமர்ந்து தரையில் மலம் கழித்தார்.
அதன் பிறகு, மலத்தைத் தரையில் விட்டுவிட்டு, யாரிடமும் தாம் செய்ததைத் தெரிவிக்காமலேயே மரினா பே சேண்ட்சை விட்டு வெளியேறினார் ராமு.
தொடர்புடைய செய்திகள்
அதே நாள் பிற்பகலில், மரினா பே சேண்ட்சின் பாதுகாப்புக் குழு உறுப்பினர், ஆடவர் ஒருவர் தமது வேலையிடத்தில் மலம் கழிக்கும் காணொளியை ஃபேஸ்புக்கில் பார்த்தார்.
அவர் தமது மேற்பார்வையாளரிடம் அது பற்றிக் கூறினார்.
பின்னர், மரினா பே சேண்ட்ஸ் மேற்பார்வையாளர் ஒருவர், சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

