போரால் விமானப் பயணம் ரத்தானது: மக்காவில் இருக்கும் ஷபிர்

போரால் விமானப் பயணம் ரத்தானது: மக்காவில் இருக்கும் ஷபிர்

படம்: ஷபிர்

05 Mar 2026 - 7:28 pm

2 mins read

உம்ரா புனிதப் பயணத்திற்காக ஆண்டுதோறும் தமது பிறந்தநாளையொட்டி சவூதி அரேபியாவின் புனித மக்கா நகருக்குச் செல்வார் புகழ்பெற்ற உள்ளூர் இசையமைப்பாளர் ஷபிர் சுல்தான்.

அந்த வகையில், இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மக்காவில் இருந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதே நாளன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தின. அதன் காரணமாக, மத்திய கிழக்கு வட்டாரத்தில் வான்வழிகள் மூடப்பட்டன.

வரும் சனிக்கிழமை (மார்ச் ஏழாம் தேதி) அவர் சிங்கப்பூர் திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவரது விமானப் பயணம் ரத்துசெய்யப்பட்டது.

தற்போது, அவர் மார்ச் 9ஆம் தேதி சிங்கப்பூர் திரும்ப, மீண்டும் மற்றொரு விமானப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும், மத்திய கிழக்கில் உள்ள நிச்சயமற்ற சூழலினால், அது கேள்விக்குறியாகவே இருப்பதாக ஷபிர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் சிக்கியிருக்கும் நண்பர்கள்

மக்காவில் நிலைமை பெரும்பாலும் அமைதியாக இருப்பதாகக் கூறிய ஷபிர், அதே நிலைமை மத்திய கிழக்கில் உள்ள மற்ற பகுதிகளில் இல்லை என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த தமது நண்பர்கள் கத்தாரிலும் துபாயிலும் தற்போது சிக்கியிருப்பதாக அவர் கூறினார். அங்கு ஒவ்வொரு மணி நேரமும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடப்பதாகவும் அதனால், அவர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஷபிர் சொன்னார்.

சன்னலுக்கு அருகில் இருக்கவேண்டாம் என்று தமது நண்பர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வேலைக்காக மாற்று ஏற்பாடுகள்

மார்ச் 7ஆம் தேதி விமானப் பயணம் ரத்துசெய்யப்பட்டதால், இங்குள்ள அவரது வேலையைத் ஒத்திவைக்கவேண்டியிருந்ததாக ஷபிர் கூறினார். சிங்கப்பூர் சென்றடையும்வரை எதற்கும் திட்டமிடாமல் இருப்பதே நல்லது என்றார் அவர்.

“பதற்றம் வேண்டாம்”

மிக முக்கியமாக, மத்திய கிழக்கில் சிக்கியிருக்கும் சிங்கப்பூரர்கள் பதற்றப்படாமல் நிதானமாகச் செயல்படும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய கிழக்கில் உள்ள நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல தவறான தகவல்கள் இடம்பெறுவதாக ஷபிர் கூறினார். அதிகாரபூர்வ தளங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறும்படி அவர் ஆலோசனை வழங்கினார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சுடன் பதிவுசெய்துகொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமது மகள்களைப் பார்ப்பதற்கு ஏக்கமாக இருப்பதாகக் கூறிய ஷபிர், குடும்பத்தார், நண்பர்கள் எனப் பலரும் தம்மைப் பற்றிக் கவலைப்படுவதாகவும் கூறினார். தாம் பாதுகாப்பாக இருப்பதைத் தெரியப்படுத்துவதற்காக ஃபேஸ்புக் பக்கத்தில் இதன் தொடர்பில் பதிவிட்டார்.

தீங்கிலும் ஒரு நன்மை உண்டு என்பதற்கேற்ப விமானப் பயணம் ரத்துசெய்யப்பட்டாலும் மக்காவில் அவரது பயணம் நீடித்திருப்பதை எண்ணி மகிழ்ந்தார் ஷபிர்.

“எனக்கு இங்குத் தங்கியிருக்க மேலும் இரண்டு நாள்கள் கிடைத்துள்ளன. சமய ரீதியாக அல்லது எனக்கான நேரமாக எடுத்துக்கொண்டு அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இறுதியில் பாதுகாப்பாக வீடு சேரமுடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று கூறினார் அவர்.

இந்நிலையில், மத்திய கிழக்குக்குச் செல்ல திட்டமிட்டுள்ள சிங்கப்பூரர்கள், நிலைமை சீராகும்வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு ஷபிர் ஆலோசனை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குபயணம்ரத்து