பாரம்பரியப் பலகை விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்த பிள்ளைகள்

கண்காட்சி வழி விழிப்புணர்வு

பாரம்பரியப் பலகை விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ந்த பிள்ளைகள்

2 mins read
502bb495-ec64-4827-a6a2-94f78efa7044
‘டோன்ட் பிளே பிளே’ கண்காட்சியில் கேரம் பலகையில் வண்ணம் தீட்டி விளையாடுவது போன்ற விறுவிறுப்பான நடவடிக்கைகளில் பிள்ளைகள் ஈடுபட்டனர். - படம்: கிறிஸ்டோ லியோன்

இணைய விளையாட்டில் மூழ்கிவிடும் பிள்ளைகள் அண்மையில் பாரம்பரியப் பலகை விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிப்புறும் வாய்ப்பினைப் பெற்றனர்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 13) தம் பிள்ளைகளுக்கு அத்தகைய மாறுபட்ட அனுபவம் கிடைத்தது என்று கூறினார் திருவாட்டி லட்சுமி மேதம்.

‘மாஜோங்’, ‘சோங்காக்’ ஆகிய விளையாட்டுகளில் தம் பிள்ளைகள் முதல் முறையாக ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“பிள்ளைகள் தங்கள் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட பலகை விளையாட்டுகள் நல்ல மாற்றுவழியாக அமைந்தன.

“கவனத்தைக் கூர்மையாக்கவும் பல பண்புகளைக் கற்கவும் அவை சிறந்த வழியாக இருக்கின்றன,” என்றார் அந்த 31 வயதுத் தாயார். 

தேசிய மரபுடைமை வாரியம் ஏற்பாடு செய்த ‘டோன்ட் பிளே பிளே’ கண்காட்சிக்குத் திருவாட்டி லட்சுமியும் அவரது பிள்ளைகளும் சென்றிருந்தனர்.

அவர்களைப் போன்றே பலரும் குடும்பமாக அதில் கலந்துகொண்டனர்.

‘ஒன் பொங்கோல்’ சமூக மன்றத்தில்  இம்மாதம் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் ‘டோன்ட் பிளே பிளே’ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

‘சோங்காக்’, ‘குட்டி குட்டி’ உள்ளிட்ட சிங்கப்பூருக்கே உரிய பாரம்பரிய விளையாட்டுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட நவீன விளையாட்டுகளிலும் வருகையாளர்களிலும் ஈடுபடலாம்.

பள்ளிகளில் விளையாடிய ‘கேரம்’, பண்டிகைக் காலங்களில் குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து விளையாடும் ‘மாஜோங்’, அடுக்குமாடிக் கீழ்த்தளத்தில் நண்பர்களுடன் ஆடும் ‘செக்கர்ஸ்’ போன்றவை மக்களை எவ்வாறு ஒன்றிணைத்தன என்பதைக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.

“வெவ்வேறு சமூகங்களைப் பல தலைமுறைகளாக ஒன்றிணைக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கு உண்டு. பார்வையாளர்கள் ஒன்றுகூடி விளையாடும்போது  அவர்களிடையே பிணைப்பு அதிகரிக்கிறது,” என்று தேசிய மரபுடைமை வாரியத்தின் கல்வி, மக்கள் தொடர்புப் பிரிவு உதவி மேலாளர் கேரி டான் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ‘பிளே!’ (PLAY! என்ற உள்ளூர்க் கலைக் குழுவின் கைவினை அரங்குகள் இடம்பெற்றன.

களிமண்ணில் பொம்மை செய்வது, கேரம் பலகையில் வண்ணம் தீட்டுவது போன்ற நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.  

‘லாய் பிளே லியாவ்’ (Lai Play Leow) எனும் பலகை விளையாட்டு அமைப்பு, சிங்கப்பூர்க் கலாசாரப் பின்னணியில் உருவாக்கப்பட்ட பல விளையாட்டுகளை மக்களிடம் அறிமுகம் செய்தது.

விலங்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறார்க்கான மாஜோங் விளையாட்டான ‘அனி-மா’ (ani-mah), ‘கோப்பி கிங்’ (kopi king) என்ற விளையாட்டு, ‘பெரனாக்கன்’ (peranakan) பலகை விளையாட்டு ஆகியவற்றையும் கண்காட்சியில் விளையாடிப் பார்க்கலாம்.

இம்மாதம் 20, 21ஆம் தேதிகளில் டாமாய் பலகை விளையாட்டுக் குழு, (Damai Board Games Community), ஸ்கிராப்பிள் சங்கம், (Scrabble Association) சிங்கப்பூர் வெய்சி சங்கம் (Singapore Weiqi Association) போன்ற உள்ளூர்க் குழுக்கள் கண்காட்சியில் நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கின்றன.

பழைய நினைவுகளைத் தூண்டும் பாரம்பரிய விளையாட்டுகளும் புதிய  நினைவுகளை உருவாக்க வழிவகுக்கும் தற்கால விளையாட்டுகளும் கொண்டுள்ள ‘டோன்ட் பிளே [Ϟ]பிளே’ கண்காட்சியில் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்
கண்காட்சிவிளையாட்டுசிங்கப்பூர்