தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவால்களை எதிர்கொள்ள பெண்களுக்கு ஊக்கமளிக்கவும்

2 mins read
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அறிவுறுத்து
6090cf20-9cb5-4e94-9fea-d8b939aba652
ஜூலை 5ஆம் தேதி சிங்கப்பூர் கல்சா சங்கத்தில் சிண்டாவின் ‘லெட் ஹர் ‌‌ஷைன்’ திட்டம் நடத்திய கலந்துரையாடலில் பெண்களை அளவுக்கதிகமாகப் பொத்திப் பொத்திக் காக்கக்கூடாது என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: சிண்டா
multi-img1 of 2

இயற்கையின் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு அழகான அம்சங்கள் இருப்பதுபோல, பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்துவமான அழகு, சவால்கள், தன்மைகள் உள்ளன.

ஆரம்பகல்வி ஆசிரியராகப் பணியாற்றிவரும் செல்வதர்‌ஷினி, 27, தான் தன் வேலையில் சேர்ந்த ஐந்தாவது ஆண்டில் ஒரு குழந்தைக்குச் சிறப்புத் தேவைகள் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததும் உடனே பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர் வசைச்சொற்களுக்கு ஆளானார். அப்பொழுது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை அவர் இன்றும் நினைவுகூர்கிறார்.

அவருடைய சகோதரி, செல்வரேவதி, 30, சற்று கூச்ச சுபாவம் கொண்டவர். ஆனால் நிதியியல் ஆலோசகராகப் பணியாற்றும்போது பலரையும் சந்தித்துப் பேச வேண்டும். தன் துறைக்கேற்ப அவர் தன்னையே மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

(இடமிருந்து) சகோதரிகள் செல்வதர்‌ஷினி, செல்வரேவதி.
(இடமிருந்து) சகோதரிகள் செல்வதர்‌ஷினி, செல்வரேவதி. - படம்: ரவி சிங்காரம்

நிதியியல் ஆலோசகரான ஜனனி ரமே‌ஷ், 25, தன் துறையில் பலவகையானோரையும் சந்தித்து அவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறார். அடுத்த ஆண்டுத் திருமணம் செய்யவுள்ளார்.

நிதியியல் ஆலோசகரான ஜனனி ரமே‌ஷ், ‘லெட் ஹர் ‌‌ஷைன்!’ திட்டத்தின் பல திட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
நிதியியல் ஆலோசகரான ஜனனி ரமே‌ஷ், ‘லெட் ஹர் ‌‌ஷைன்!’ திட்டத்தின் பல திட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். - படம்: சிண்டா

இவ்வாறு பெண்கள் பலதரப்பட்ட சவால்களையும் அன்றாடம் எதிர்கொள்கின்றனர். அவற்றைப் பற்றிக் கலந்துரையாடும்போது, இது தனியாகச் செல்லும் பயணம் அல்ல என்பதைப் பெண்கள் உணர்ந்துள்ளனர்.

அதற்கு வழிவகுத்தது, ஜூலை 5ஆம் தேதி காலை சிங்கப்பூர் கல்சா சங்கத்தில், சிண்டா 12 இந்திய அமைப்புகளோடு இணைந்து ஏற்பாடுசெய்த கலந்துரையாடல்.

பெண்களுக்குத் துணைபுரிய 2022 முதல் சிண்டா நடத்திவரும் ‘லெட் ஹெர் ‌‌ஷைன்!’ திட்டத்தின் ஓர் அங்கமாக அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இயற்கையின் நான்கு பருவங்களைப் பெண்களின் வாழ்க்கைப் பருவங்களோடு ஒப்பிட்டுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சிறப்புரையாற்றிய அமைச்சர் இந்திராணி ராஜா.
சிறப்புரையாற்றிய அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: ரவி சிங்காரம்

சிறப்பு விருந்தினர் அமைச்சர் இந்திராணி ராஜா, “அளவுக்கதிகமாகப் பெண்களைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கக்கூடாது,” என வலியுறுத்தினார். “பிரச்சினைகள், அபாயங்கள் உலகில் இல்லையென அவர்களிடம் சொல்லக் கூடாது. அச்சவால்களைக் கையாளும் திறன்களை அவர்களிடத்தில் வளர்க்க வேண்டும்,” என்றார்.

“உதாரணத்துக்கு, பள்ளியில் துன்புறுத்தல் சம்பவம் ஏற்படும்போது, சிறுமியை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டால் எதிர்காலத்தில் அதை எப்படிக் கையாள்வது என அவருக்குத் தெரியாமல் போய்விடும். துன்புறுத்துபவரைத் தைரியமாக எதிர்கொள்ளப் பெற்றோர் கற்பிக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் இந்திராணி.

“குடும்பத்தையும் சமூகத்தையும் பிணைப்பது பெண்களே. அதனால், பெண்கள் தம் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தமக்குத் தேவைப்படுவது பற்றி அறிந்துகொள்வது முக்கியம்,” என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.

உடல் ஆரோக்கியத்துக்கும் மன ஆரோக்கியத்துக்கும் தொடர்பு

குடல் ஆரோக்கியம் பற்றிப் பேசிய டாக்டர் கல்பனா பாஸ்கரன், “இந்திய உணவில் அதிக சத்து உள்ளது. உதாரணத்துக்கு, தயிர், காய்கறிகள், பழங்கள், தானியங்களை உட்கொள்ளுங்கள். குடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளையும் சிறப்பாகப் செயல்படும்,” என்றார்.

இந்தியர்கள் பலருக்கும் நீரிழிவு நோய்க் குடும்ப வரலாற்றில் இருப்பதால், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்டரம் எனப்படுவது ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறினார் பெண் டாக்டர் அன்னபூர்ணா வெங்கட், 74. “சிறுவயதிலிருந்தே நீங்கள் சீனி, பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்