தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாங்கள் ஆக்கபூர்வமான கட்சிதான்: சீ சூன் ஜுவான்

2 mins read
8c7a0c4c-1b95-49c8-8676-76221c3d2402
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கு மாற்றுக் கொள்கை அறிக்கைகளை உருவாக்கியுள்ள சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, நிச்சயம் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிதான் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் தெரிவித்திருக்கிறார்.

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சீ, வியாழக்கிழமை(மே 1) காலை உட்லண்ட்ஸ் எம்ஆர்டிக்கு அருகிலுள்ள உணவு நிலையத்தில் தொகுதி உலா சென்ற பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

காரை ஒருவர் ஒட்டிக்கொண்டிருக்கும்போது இயக்குச்சக்கரத்தைப் மற்றொருவரின் கரமும் பற்றி அந்தக் காரை விபத்துக்குள்ளாக்குவதுபோன்றதுதான் அதிக எதிர்க்கட்சியினர் கொண்டுள்ள நாடாளுமன்றம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வியாழக்கிழமையன்று பிரசாரக் கூட்டத்தில் கூறியது குறித்து டாக்டர் சீயிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, “திரு ஓங் சொன்ன அந்த உவமை எல்லை மீறியது, ஏற்கத்தகாதது. எங்கள் கட்சியின் இணையத்தளத்திலுள்ள மாற்று அறிக்கைகளைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் பதிலளித்தார்.

கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலையின்றி அதற்குக் குறைவான நிலையிலுள்ள வேலைகளில் சிங்கப்பூரர்களில் கணிசமானோர் தற்போது பணியாற்றுவதாக டாக்டர் சீ கூறினார்.

பொருள், சேவை வரியைப் (ஜிஎஸ்டி) பிற்போக்கான வரி என்றும் குறைகூறிய டாக்டர் சீ, “அதனை உயர்த்துவதற்குப் பதிலாக சொகுசுப் பொருள்களுக்கான வரிகளை ஏற்றலாமே!” என்றார்.

உணவு, மருந்து, கல்விப் பொருள்கள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான பொருள், சேவை வரியை நீக்கும் யோசனையை டாக்டர் சீ முன்வைத்தார் .சொகுசுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 13, 14 விழுக்காட்டுக்கு உயர்த்தவும் யோசனை அவர் யோசனை தெரிவித்தார்.

ஜிஎஸ்டியின் பெரும்பகுதியைப் பணக்காரர்களும் வெளிநாட்டினரும் செலுத்துகின்றனரே எனக் கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த டாக்டர் சீ, “பணக்காரர்களுக்குக் கூடுதல் வரிகள் தேவை என்பதற்கு இதுவே சான்று,” என்று கூறினார்.

ஆறு பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான வரவுசெலவுத் திட்ட உபரித்தொகை இருக்கையில் அடுத்த வேளை உணவுக்குத் திண்டாடும் மக்கள் பற்றி அரசாங்கம் கவலைப்படவில்லையா என்றும் டாக்டர் சீ கேட்டார்.

“உயர்ந்த இடத்தில் நிற்கும் அமைச்சர்கள், எளிய மக்களின் நிலைக்கு இறங்கிவந்து, அவர்கள் படும்பாட்டை அறிந்துகொள்ள விரும்புகிறேன். பல விதிமுறைகளை வகுப்பது, தேர்தலுக்குப் பிறகு காணாமல் போவது என்ற சுழற்சிக்கிடையே அதிகமான வாழக்கைச் செலவினத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்