வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக பாதுகாவல் அதிகாரி ஒருவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் $500 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
‘கிராஞ்சி லாட்ஜ் 1’ தங்குவிடுதியின் பாதுகாவலரான முஹம்மது ஸுல்ஃபாக்கர் முஹம்மது ஸைனி, 25, எனப்படும் அவர், 2023 மே மாதம் இரண்டு ஊழியர்களிடம் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
கள்ள சிகரெட்டுகளைப் பயன்படுத்திய ஊழியர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி அவர் $500 பெற்றார். தங்குவிடுதி விதிக்கும் அபராதத்தைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமான தொகை அது. கள்ள சிகரெட்டுடன் பிடிபடும் ஊழியருக்கு $20 அபராதம் விதிக்க வேண்டும் என்பது அந்த விடுதியின் விதிமுறைகளில் ஒன்று.
வலுக்கட்டாயமாகப் பெற்ற $500 பணத்தை இதர நான்கு பாதுகாவல் அதிகாரிகளுடன் ஸுல்ஃபாக்கர் பகிர்ந்துகொண்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (ஜனவரி 27) லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதுகாவல் அதிகாரிக்கு உரிய நேர்மையை மீறிய ஸுல்ஃபாக்கர், தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அரசாங்க வழக்கறிஞர் ஜோனதன் டான் தமது வாதத்தில் குறிப்பிட்டார்.
கள்ள சிகரெட்டுகள் பயன்படுத்தியது பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தால், வேலை பறிபோய்விடும் என்றும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல நேரிடும் என்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பயந்ததைப் பயன்படுத்தி அவர் லஞ்சம் பெற்றதாகவும் வழக்கறிஞர் கூறினார்.
கட்டுமான ஊழியர்களான இரண்டு பங்ளாதேஷியர்கள் 2023 மே 11 ஆம் தேதி ஐந்து பாக்கெட் கள்ள சிகரெட்டுகளுடன் விடுதிக் காவலரிடம் பிடிபட்டனர். பின்னர் அன்று இரவு 11 மணியளவில் ஸுல்ஃபாக்கரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறிது நேரம் கழித்து, அபராதமாக $500 வாங்குமாறு மற்றொரு பாதுகாவல் அதிகாரிக்கு ஸுல்ஃபாக்கர் உத்தரவிட்டார். கேட்ட பணத்தைத் தராவிட்டால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அந்த இரு ஊழியர்களையும் அவர் மிரட்டியதாகக் கூறப்பட்டது.
அதனால், $500 பணத்தை அந்த ஊழியர்கள் ஸுல்ஃபாக்கரிடம் கொடுத்தனர். அந்தப் பணத்தைப் பகிர்ந்துகொண்ட இதர நான்கு பாதுகாவல் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
2024 செப்டம்பர் 13ஆம் தேதி இரண்டு பாதுகாவல் அதிகாரிகளுக்கு தலா மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2024 டிசம்பர் 16ஆம் தேதி ஓர் அதிகாரிக்கு 10 நாள் சிறையும் நான்காம் நபருக்கு இம்மாதம் 9ஆம் தேதி மூன்று வாரச் சிறையும் விதிக்கப்பட்டது.
அந்த விடுதியில் கள்ள சிகரெட் பயன்படுத்தும் வெளிநாட்டு ஊழியர்களை மிரட்டி, பணம் பறித்து அதனை பாதுகாவல் அதிகாரிகள் பங்கு போட்டுக்கொள்ளும் வழக்கம் 2021ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

