சனிக்கிழமை (மே 3) வாக்களிப்பு தினம்.
வாக்களிப்பு நேரம் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை.
வாக்காளார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு நேரடியாகச் சென்று வாக்களிக்க வேண்டும்.
காலையில் வாக்களிப்பு நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நீண்ட வரிசைகளைத் தவிர்க்க பிற்பகல் நேரத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களை தேர்தல் துறை ஊக்குவிக்கிறது.
வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பு, அங்கு கூட்டமாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வாக்காளர் அட்டையில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடிப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
வாக்களிக்கச் செல்லும்போது அரசியல் கட்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைகளை அணிய வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சின்னங்கள், படங்கள், இதர பொருள்கள் போன்றவற்றை வாக்களிப்பு மையங்களுக்குள் கொண்டு செல்லக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு செய்யும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்தல் துறை கூறியது.
வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டுடன் வாக்காளர் அட்டையைக் காண்பித்து வாக்களிக்க வேண்டும்.
வாக்கு அட்டைக்குப் பதிலாக மின்னிலக்க வாக்கு அட்டையையும் சிங்பாஸ் செயலி மூலம் பெறக்கூடிய மின்னிலக்க வாக்காளர் அட்டையையும் பயன்படுத்தலாம்.
வாக்குச்சீட்டில் ‘X’ முத்திரையிட்டு, அதை மடித்து வாக்குப் பெட்டிக்குள் போட்டுவிட வேண்டும்.
வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சி சின்னத்துக்குப் பக்கத்தில் ‘X’ முத்திரையிட வேண்டும்.
வாக்குச்சீட்டில் ‘X’ முத்திரையிடுவதற்கான மை நிரப்பப்பட்ட கருவி வழங்கப்படும்.
‘X’ முத்திரையிட வாக்காளர்கள் தங்கள் சொந்த பேனாக்களைக் கொண்டு செல்லலாம்.
வாக்களிப்பு நிலையத்துக்கு நடந்து செல்லுமாறு அல்லது பொதுப் போக்குவரத்து பயன்படுத்துமாறு வாக்காளர்களிடம் வலியுறுத்தப்படுகிறது.
அனுமதி வழங்கபடாத இடங்களில் வாகனங்களை நிறுத்தினாலோ அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தினாலோ வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட, நலிவுற்ற, உடற்குறையுள்ளோரை வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அவர்களை இறக்கிவிட தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு உதவி தேவைப்படுவோருக்குத் தேவைப்பட்டால் முன்னுரிமை வரிசையும் சக்கரநாற்காலிகளும் வழங்கப்படும் என்று தேர்தல் துறை கூறியது.
இவர்கள் தேர்தல் அதிகாரிகளின் உதவியை நாடலாம்.
வாக்களித்ததும் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும்.
சந்தேகத்துக்குரியவர்களைப் பார்த்தாலோ அல்லது வாக்களிப்பு நிலையங்களில் கிடக்கும் பைகள், பொட்டலங்களைப் பார்த்தாலோ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.