பூன் லே பேருந்து முனையத்துக்கு அருகே ஈரடுக்குப் பேருந்து ஒன்று சாலையோரத் தடுப்பின்மீது ஏறி போக்குவரத்துப் பாதுகாப்புத் தூண்மீது மோதியது.
அதுகுறித்து விசாரித்து வருவதாகப் பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ‘எஸ்எம்ஆர்டி பசஸ்’ புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.
இச்சம்பவத்தைச் சீன மொழி ஊடகமான சாவ்பாவ் காணொளியாகப் பதிவுசெய்தது. அதில், சம்பந்தப்பட்ட பேருந்து, சாலையோரத் தடுப்பில் ஏறியிருந்ததும் அங்கிருந்த சிறிய தூண் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கியதும் தெரிந்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பேருந்தில் பயணிகள் இருந்தனர். தூண்மீது மோதியதும் ஓட்டுநர் பேருந்தைப் பின்னால் கொண்டுசெல்ல முயன்றார். அதனையடுத்து தூண் இடிந்து விழுந்தது.
அந்தத் தூணை நகர்த்த எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் உதவ முயன்றதும் காணொளியில் தெரிந்தது.
சம்பவம் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்ததாக ‘எஸ்எம்ஆர்டி பசஸ்’ நிர்வாகத் துணை இயக்குநர் வின்சன்ட் கே கேள்விகளுக்குப் பதிலளித்தார். அந்த 243G பேருந்துச் சேவை பூன் லே பேருந்து முனையத்துக்குள் வந்துகொண்டிருந்தது.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 64க்கும் ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 3க்கும் இடையே உள்ள இணைப்புச் சாலையை அந்தப் பேருந்து ஓட்டுநர் கவனிக்காததால் சம்பவம் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு ஓட்டுநர் பயணத்தைத் தொடர்ந்ததாக வின்சன்ட் கே தெரிவித்தார்.


