வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர்க் குடும்பங்கள், அக்டோபர் மாதத்தில் பயனீட்டு, சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறவிருக்கின்றன.
வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவும் அரசாங்கத் திட்டங்களில் அதுவும் ஒன்று.
தகுதிபெறும் குடும்பங்கள், பயனீட்டுக் கட்டணத்தில் $190 வரையிலான யு-சேவ் தள்ளுபடிகளைப் பெறும் என்று நிதியமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 30) அறிக்கை வெளியிட்டது. இது வழக்கமாக வழங்கப்படுவதைப்போல் இருமடங்கு.
அக்குடும்பங்கள் அக்டோபர் மாதத்தில் ஒரு மாத சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் பெறும்.
இரண்டுவித தள்ளுபடிகளும் வீட்டின் அளவிற்கு ஏற்ப மாறுபடும்.
எடுத்துக்காட்டாக, நாலறை வீட்டில் வசிப்போர் யு-சேவ் தள்ளுபடியாக $150யைப் பெறுவர். அதில் $75 வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடி. எஞ்சிய $75 கூடுதல் தள்ளுபடி. அத்துடன், அரை மாதம் மதிப்புள்ள சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படும்.
இந்நிலையில், ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போர் $190 மதிப்புள்ள யு-சேவ் தள்ளுபடியையும் ஒரு மாதம் பெறுமானமுள்ள சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் பெற்றுகொள்வர்.
ஒட்டுமொத்தத்தில், தகுதிபெறும் குடும்பங்கள் $760 வரையிலான யு-சேவ் தள்ளுபடிகளையும் மூன்றரை மாதம் பெறுமானமுள்ள சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவுகளையும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வரை பெறுகின்றன.
தகுதிபெறும் குடும்பங்களுக்கான தள்ளுபடித் தொகை, அவற்றின் எஸ்பி சர்விசஸ், நகர மன்றங்களுடன் உள்ள கணக்குகளில் தானாகச் சேர்க்கப்படும்.
இவ்வாண்டு ஜூலை மாதம், தகுதிபெறும் குடும்பங்கள், இவ்வாண்டு அக்டோபரிலும் அடுத்த ஆண்டு ஜனவரியிலும் வழக்கமாக வழங்கப்படும் யு-சேவ் தள்ளுபடிகளை இரட்டிப்பாகப் பெற்றுக்கொள்ளும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்துள்ள செலவினங்களைச் சமாளிக்க இருமடங்குத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்து வைத்திருப்போரைக் கொண்ட குடும்பங்கள் யு-சேவ் தள்ளுபடிகளுக்குத் தகுதிபெறமாட்டா என்று அமைச்சு தெரிவித்தது.
