லெண்ட்டோர் கட்டுமானத் தள விபத்து: இறந்த இருவரும் இளம் தந்தையர்

3 mins read
ஒருவர், பங்ளாதேஷில் தம் குடும்பத்துக்காக வீடு கட்ட பணம் சேமித்து வந்தார்
17833341-3e33-43a4-9e89-eb2bf148e2b7
பங்ளாதேஷில் இருந்தபோது எடுக்கப்பட்ட படத்தில், தம் மனைவியுடன் திரு சலீம் ஹுசேன். - படம்: நஸ்ருல் இஸ்லாம் பில்து

தம் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை மேம்படுத்த, திரு சலீம் ஹுசேன் சிங்கப்பூரில் கடுமையாக உழைத்து வந்தார்.

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள கிராமத்தில் புதிய வீடு கட்ட தொடக்க வேலைகளுக்கான செலவைச் சமாளிக்க அவரிடம் போதுமான அளவு பணம் இருந்தது.

எனினும் அப்பணி தொடங்குவதற்குள், செப்டம்பர் 17ஆம் தேதி லெண்ட்டோர் அவென்யூவில் நிகழ்ந்த பணியிட விபத்தில் திரு ஹுசேன், 39, உயிரிழந்தார்.

வடக்கு-தெற்கு பாதை கட்டுமானத் தளத்தில், winch drum எனும் கருவியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்களில் திரு ஹுசேனும் ஒருவர்.

இரு கான்கிரீட் புளோக்குகள் மீது அந்த winch வைக்கப்பட்டிருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

கனமான பொருள்களைத் தூக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அந்த winch, அந்த புளோக்குகளில் இருந்து நழுவி, ஊழியர்கள் மீது விழுந்தது.

திரு ஹுசேன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினார்.

அவருடன் வேலை செய்த மற்றோர் ஊழியரான 38 வயது தளப் பொறியாளர், சுயநினைவற்ற நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவருக்கு நான்கு வயதில் மகன் உள்ளார்.

இந்த விபத்தில் சிக்கிய 32, 47 வயதுடைய மற்ற இரு ஊழியர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், திரு ஹுசேனின் உடல் சனிக்கிழமை (செப்டம்பர் 21) டாக்காவை சென்றடையும் என்று அவருடைய உறவினர் நஸ்ருல் இஸ்லாம் பில்து, 33, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

சிங்கப்பூரில் அகழ்பொறி இயக்குபவராக பணிபுரியும் திரு பில்து, திரு ஹுசேனின் ஏழு வயது மகனும் 12 வயது மகளும் நிச்சயமில்லாத எதிர்காலத்தை எதிர்நோக்குவதாகக் கூறினார்.

“மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, தம் பிள்ளைகளுக்குப் புதிய வீடு கட்டித் தர அவர் பணம் சேமித்து வந்தார்.

“தம் குடும்பத்தாரைக் காப்பாற்ற தம் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். ஆனால், இதுநாள் வரை அவர்களுக்காக வீடு கட்டித்தர முடியவில்லை.

“புதிய வீட்டிற்கு செங்கல் இன்னும் வைக்கப்படவில்லை. அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்டுள்ளது,” என்றார் திரு பில்து.

திரு ஹுசேனின் மனைவியும் இரு பிள்ளைகளும், டாக்காவில் தற்போது இந்த வீட்டில்தான் வசிக்கின்றனர்.
திரு ஹுசேனின் மனைவியும் இரு பிள்ளைகளும், டாக்காவில் தற்போது இந்த வீட்டில்தான் வசிக்கின்றனர். - படம்: நஸ்ருல் இஸ்லாம் பில்து

திரு ஹுசேன் சிங்கப்பூரில் ஏறக்குறைய 15 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக திரு பில்து சொன்னார். கடந்த எட்டு மாதங்களாக ‘விஎஸ்எல் சிங்கப்பூர்’ எனும் நிறுவனத்துக்காக திரு ஹுசேன் பணிபுரிந்தார்.

இந்நிலையில், கட்டுமானத் தள விபத்தில் சம்பந்தப்பட்ட நான்கு ஊழியர்களும் ‘விஎஸ்எல் சிங்கப்பூர்’ நிறுவனத்துக்காக வேலை செய்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

விபத்து நிகழ்ந்த நாளன்று, ஜூரோங் தீவில் உள்ள சுரங்கத்தில் திரு பில்து வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு தொலைத்தொடர்பு சமிக்ஞை இல்லை.

இரவு 7 மணிவாக்கில் அவர் சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது, தம் கைப்பேசி ஒன்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததை அவர் கவனித்தார். திரு ஹுசேனின் மரணம் குறித்து முதலில் யாரிடமிருந்து தமக்குத் தகவல் கிடைத்தது என்பதை திரு பில்துவால் நினைவுகூர முடியவில்லை.

என்னால் நம்ப முடியவில்லை. என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன், என் சகோதரரை இழந்துவிட்டேன் என என் மேற்பார்வையாளரிடம் கூறினேன்.
ஹுசேனின் உறவினர் பில்து

அடுத்த நாள் சவக்கிடங்கிற்குச் சென்று திரு ஹுசேனின் உடலைப் பார்க்கும் வரை, அவர் இறந்துவிட்டார் என்பதை திரு பில்துவால் ஏற்க முடியவில்லை.

லெண்ட்டோரில் உள்ள கட்டுமானத் தளம்.
லெண்ட்டோரில் உள்ள கட்டுமானத் தளம். - படம்: ஷின் மின்

திரு ஹுசேனை உற்சாகம் உடையவர் என வர்ணித்த திரு பில்து, “நான் பல நாள் அவரைத் தொடர்புகொள்ளாவிட்டால், என்னை அவர் அழைத்து ‘மறந்துவிட்டாயா’ எனக் கேட்பார்.

“நான் இளம் வயதுடையவராக இருப்பதால், நான்தான் அவரை தொடர்புகொள்ள வேண்டும். என்றாலும் அவருக்கு எந்தவொரு ஆணவமும் கிடையாது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்