சிங்கப்பூரின் டவுன்டௌன் ரயில் பாதையின் நம்பத்தன்மை கடந்த மார்ச் மாதத்தில் குறைந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அந்த ரயில் பாதையில் ஏற்பட்ட தாமதம் ஐந்து நிமிடங்களுக்குமேல் நீடித்தது.
இதற்கிடையே, வட்டப் பாதையின் நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளதாக ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்புநோக்க, ஒட்டுமொத்த ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையில் கடந்த மாதம் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம்வரை ஐந்து நிமிடங்களுக்குமேல் நீடித்த தாமதத்திற்கு இடையே ரயில்கள் சராசரியாக 1.74 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன. அது, சிங்கப்பூர் நிர்ணயித்த ஒரு மில்லியன் கிலோமீட்டரைவிட அதிகம்.
தாமதம் ஏற்படுவதற்குமுன் ரயில்கள் பயணம் செய்த தூரத்தைக் கணக்கிடுவதை அடிப்படையாகக் கொண்டு ரயில் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நிர்வகிக்கும் வடக்கு கிழக்கு ரயில் பாதையே ஆக நம்பிக்கைக்குரிய ரயில் பாதையாக நீடிக்கிறது.
பிப்ரவரியில் வடக்கு-கிழக்குப் பாதையில் ரயில்கள் பயணம் செய்த தூரம் 4.42 மில்லியன் கிலோமீட்டர். மார்ச் மாதத்தில் ரயில்கள் அந்தப் பாதையில் 4.45 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தன.
வட்டப் பாதை, நம்பிக்கைக்குரிய ரயில்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வந்தது. எஸ்எம்ஆர்டி நிறுவனம் அதை இயக்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
வட்டப் பாதையில் பிப்ரவரி மாதம் 1.8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்கள் பயணம் செய்தன. கடந்த மாதம் அதே பாதையில் ரயில்கள் பயணம் செய்த தூரம் 2.37 மில்லியன் கிலோமீட்டர்.
மூன்றாவது நிலையில் வந்தது எஸ்பிஎஸ் டிரான்சிட் செயல்படுத்தும் டவுன்டௌன் பாதை. டவுன்டௌன் பாதையில் தாமதங்களுக்கு இடையே பயணம் செய்த ரயில்களின் தூரம் 2.8 மில்லியன் கிலோமீட்டரிலிருந்து 2.1 மில்லியன் கிலோமீட்டருக்குக் குறைந்தது.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் கிழக்கு-மேற்குப் பாதையும் வடக்கு -தெற்கு பாதையும் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் வந்தன. அவை சிங்கப்பூரின் ஆகப் பழைய ரயில் பாதைகள்.
கிழக்கு-மேற்குப் பாதையில் தாமதங்களுக்கு இடையே ரயில்கள் பயணம் செய்த தூரம் 1.44 மில்லியன் கிலோமீட்டரிலிருந்து 1.45 மில்லியன் கிலோமீட்டருக்கு அதிகரித்தது.
வடக்கு-தெற்குப் பாதையில் தாமதங்களுக்கு இடையே 1.24 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்கள் பயணம் செய்தன.
எஸ்எம்ஆர்டி செயல்படுத்தும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் நம்பகத்தன்மையும் கடந்த மாதம் குறைந்தது. அந்தப் பாதையில் கடந்த மாதம் மூன்று முறை ஏற்பட்ட தாமதங்கள் ஐந்து நிமிடங்களுக்குமேல் நீடித்தன.

