ஹொங் கா நார்த் தனித்தொகுதியைப் பல்லாண்டுகாலமாக இறுகப் பற்றியிருந்த டாக்டர் ஏமி கோர் தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, போக்குவரத்து மூத்த துணையமைச்சராகப் பல ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள இவர், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு, அரசியலிலிருந்து ஒதுங்குவதாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஐந்து தவணைக் காலத்துக்கு ஹொங் கா நார்த் வட்டாரத்தில் கடந்த 24 ஆண்டுகள் சேவையாற்ற கிடைத்த வாய்ப்புக்காக டாக்டர் கோர் நன்றி கூறினார்.
ஹொங் கா நார்த் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் புரிந்து அவர்களின் வாழ்க்கையையும் சுற்றுப்புறத்தையும் மேம்படுத்த முடிந்ததில் பெருமிதம்கொள்வதாகவும் இவர் குறிப்பிட்டார்.
இத்தனை ஆண்டுகள் ஹொங் கா நார்த் குடியிருப்பாளர்கள் தந்த வலுவான ஆதரவுக்கும் டாக்டர் கோர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹொங் கா நார்த் தனித்தொகுதியை மூன்று பொதுத் தேர்தல்களிலும் டாக்டர் கோர் கைவிட்டுப் போகாமல் தக்கவைத்துக்கொண்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 60.98 விழுக்காட்டு வாக்குகளுடன் அவர் அத்தொகுதியில் வென்றார்.
சுவா சூ காங் குடியிருப்பாளர்களுக்கு டாக்டர் கோர் ஆற்றிய அளப்பரிய சேவைக்குத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் நன்றி தெரிவித்தார். ஹொங் கா நார்த் தொகுதியை டாக்டர் கோர் சிறப்பாக ஒன்றிணைத்ததைக் குறிப்பிட்டும் அவர் பாராட்டினார்.

