தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஜக நிதி திரட்டுக்காக சீ சூன் ஜுவான் 140 கிலோமீட்டர் நடைப்பயணம்

2 mins read
dc5564d2-ffb1-487a-b004-c3374e0b1ed0
140 கிலோமீட்டர் நடைப்பயணத்தை ராஃபிள்ஸ் பிளேசில் தொடங்கினார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான். அவருடன் துணைக்கு நடக்கும் கட்சி உறுப்பினர் டாக்டர் ஜேம்ஸ் கோமெஸ். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சிஜக) நிதி திரட்டு முயற்சிக்காக ஜூன் 6ஆம் தேதி காலை ராஃபிள்ஸ் பிளேசிலிருந்து மூன்று நாள் நடைப்பயணத்தைத் தொடங்கினார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான்.

‘வாக் த டாக்’ (Walk The Talk) என்பதே இந்த நடையின் பெயர்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்கு மொத்தம் 140 கிலோமீட்டர் அவர் நடக்கவுள்ளார்.

வெள்ளிக்கிழமை காமன்வெல்த், ஜூரோங், புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங் போன்ற பகுதிகளுக்குச் சென்று சுவா சூ காங், மார்சிலிங்-இயூ டீயில் அன்றைய தினம் நிறைவுசெய்வார்.

சனிக்கிழமை பொங்கோல், செங்காங் போன்ற வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார்.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை டாக்டர் சீ சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்குக் கால்நடையாகவே செல்வார். மொத்தம் 140 கிலோமீட்டர் நடப்பார்.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை டாக்டர் சீ சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளுக்குக் கால்நடையாகவே செல்வார். மொத்தம் 140 கிலோமீட்டர் நடப்பார். - படம்: ரவி சிங்காரம்

ஞாயிற்றுக்கிழமை கிழக்குப் பகுதியில் மேலும் சில இடங்களில் நடந்து ஹோங் லிம் பூங்காவில் பிற்பகலில் தன் நடையை நிறைவுசெய்வார்.

அதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு வரை அவரும் அவருடைய சக சிஜக உறுப்பினர்களும் உரையாற்றுவர். பொதுமக்களும் அந்நிகழ்ச்சிக்கு வரலாம்.

அவருடன் துணையாகக் கட்சி உறுப்பினர்கள் பிரயன் லிம், டாக்டர் ஜேம்ஸ் கோமெஸ், ஜுஃப்ரி சலீம் ஆகியோருடன் மூன்று இளம் கட்சி உறுப்பினர்களும் ராஃபிள்ஸ் பிளேசிலிருந்து நடைப்பயணத்துக்குப் புறப்பட்டனர்.

இதற்கு முன்னர் 2007ல் ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் 2015ல் நிதி திரட்டுக்காகவும் டாக்டர் சீ நடைப்பயணம் மேற்கொண்டார்.

“சென்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பல இளையர்களும் சிஜகவில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்பது மனநிறைவளிக்கிறது,” என்றார் டாக்டர் சீ.

“சிஜக தைரியமான கட்சி எனப் பெயர் பெற்றுள்ளது. மேலும், பலரும் நம் அரசியல் கட்டமைப்புகளில் உள்ள அநியாயத்தைக் கண்டு வருந்துகின்றனர். விலைவாசி உயர்வால் சிரமப்படுகின்றனர். அதனால் சிஜகவை நாடுகின்றனர்,” என்றார் கட்சித் தலைவர் பால் தம்பையா.

பொதுத் தேர்தலையடுத்து இளம் வேட்பாளர்களைத் தம் கட்சிக்கு ஈர்ப்பதற்காகச் சில நிகழ்ச்சிகளுக்கு சிஜக ஏற்பாடு செய்து வந்துள்ளது.

இதுவரை 200க்கும் மேற்பட்டோர் தொண்டூழியர்களாகவோ உறுப்பினர்களாகவோ பதிவுசெய்துள்ளனர் என்றும் அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் சிஜக அண்மையில் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு வந்தனர் என்றும் டாக்டர் தம்பையா கூறினார்.

அந்நிகழ்ச்சிகளின் கலந்துரையாடல்கள்வழி இளையர்கள் சில ஆலோசனைகளை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

“தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை முன்பாக ‘டாலர் டீல்’ போன்றவற்றைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளை ஈடுபடுத்தி நாடு முழுவதும் அவற்றை வழங்குவது போன்ற ஆலோசனைகள் அதன்வழி எழுந்தன,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கோரி சிஜக மே 18ஆம் தேதி ஒரு மனுவையும் தொடங்கியிருந்தது.

குறிப்புச் சொற்கள்