இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு டாக்டர் ஃபைஷால் இப்ராஹிமின் பங்களிப்பு

இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு டாக்டர் ஃபைஷால் இப்ராஹிமின் பங்களிப்பு

3 mins read
278db9ef-2128-4180-bc66-062d27da2cda
இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் தொடர்ந்து சிறந்த சேவையாற்றியுள்ளார் என்று சமூகத் தலைவர்கள் கூறினர். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் உன்னதத் தொண்டாற்றியுள்ளதாக இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் முஹம்மது பிலால் கூறியுள்ளார்.

“முயிஸ், மெண்டாக்கி, மெஸ்ரா ஆகிய முஸ்லிம் அமைப்புகளின் இணக்கப்பாலமாக இயங்கிய ‘எம்கியூப்’ முயற்சியில் இந்திய முஸ்லிம்களின் பங்கேற்பு குறைவாக இருந்தது.

“அந்நிலையை மாற்றியமைக்கும் விதமாக டாக்டர் ஃபைஷால், ‘எம்கியூப் பிளஸ்’ என்ற மாறுபட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்திய முஸ்லிம் அமைப்புகளையும் அம்முயற்சியில் ஈடுபடுத்தினார்,” என்று அவர் கூறினார்.

டாக்டர் ஃபைஷால் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராவதற்கு முன்னரே பல்வேறு வகைகளில் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு உதவி வந்ததைத் திரு பிலால் சுட்டினார்.

புதிதாக அப்பொறுப்பை ஏற்றுள்ள திரு ஸாக்கி முகம்மது, மெண்டாக்கி அமைப்பின் தலைவராகவும் இருப்பதால் மலாய் முஸ்லிம் சமூகத்திற்கும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கும் இடையேயான இணக்கத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியமெனத் தாம் கருதுவதாகத் திரு பிலால் கூறினார்.

மலாய் முஸ்லிம், இந்திய முஸ்லிம் சமூகங்களுக்கிடையேயான இணக்கம் மட்டுமன்றி, இந்திய முஸ்லிம் சமூகத்தில் போதைப் புழங்கிகளின் மறுவாழ்வு, கைதிகளை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைத்தல் போன்ற நலத் திட்டங்களிலும் டாக்டர் ஃபைஷால் அதிகக் கவனம் செலுத்தியதாக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி கூறினார். “டாக்டர் ஃபைஷாலின் நற்பணியைத் திரு ஸாக்கி தொடர்வார் என நம்புகிறேன்,” என்றார் அவர்.

கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முகம்மது, டாக்டர் ஃபைஷால் மக்களின் பிரச்சினைகளையும் ஆதங்கங்களையும் புரிந்து செயல்படுபவர் என்று கூறினார்.

“முன்பு நாடாளுமன்றத்தில் ‘இந்திய முஸ்லிம் அமைப்புகள்’ என்ற தொடர் பெரிதும் பயன்படுத்தப்படாதது சிலருக்கு வருத்தமளித்தது. அதை அவர் கருத்தில்கொண்டு, மலாய் முஸ்லிம், இந்திய முஸ்லிம் அமைப்புகளென இரண்டையும் குறிப்பிட்டுக் கூறத் தொடங்கியது மகிழ்ச்சியளித்தது,” எனத் திரு ராஜா முகம்மது சொன்னார்.

சமய நல்லிணக்கத்தை அதிகரிக்க முனையும் முயற்சிகளுக்கு டாக்டர் ஃபைஷால் ஆதரவு கொடுக்கத் தவறியதில்லை என்று பிஸ்மி வானொலித் தலைவர் சீனி ஜாஃபர் கனி கூறினார்.

“பிஸ்மி வானொலி தொடங்கியதுமுதல் அவர் சிறந்த ஆதரவாளராக இருந்துள்ளார். முஸ்லிம் மக்களிடையே சமய வேறுபாடுகளைக் குறைக்க உதவும் முயற்சி என்பதால் அவரது ஆதரவு எங்களுக்குத் தொடக்கம் முதலே இருந்தது. எங்களது ஐந்தாம், ஒன்பதாம் ஆண்டுநிறைவு விழாக்களிலும் அவர் கலந்துகொண்டுச் சிறப்பித்தார்,” என்று திரு சீனி கூறினார்.

திரு ஃபைஷாலின் பதவி விலகல் தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அது சிங்கப்பூர்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய இழப்பென்றும் நீ சூன் குழுத்தொகுதியில் வசிக்கும் திருவாட்டி கிருஷ்ணம்மா மாணிக்கம் சொன்னார். மேலும், டாக்டர் ஃபைஷால் அனைவருடனும் இயல்பாகப் பழகுபவர், ஒருபோதும் உதவத் தயங்காதவர் என்றும் அவர் கூறினார்.

“அவர் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது பொறுப்பின்கீழிருந்த வட்டாரத்தில் நான் வசிக்கவில்லை. இருப்பினும், ஏதேனும் சமூக நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது, தம்மிடம் எவ்வித உதவியும் கேட்கத் தயங்க வேண்டாம் என்று டாக்டர் ஃபைஷால் சொல்வார்,” எனத் திருவாட்டி கிருஷ்ணம்மா சொன்னார்.

இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தச் சிங்கப்பூருக்கும் அவரது பதவி விலகல் மாபெரும் இழப்பெனப் பலரும் கருத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்
அரசியல்முஸ்லிம்சமயம்சமூகம்முஸ்லிம் லீக்