ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) தலைவர் பொறுப்பிலிருந்து டாக்டர் ஜெரார்ட் ஈ, 77, விலகுகிறார். செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அப்பொறுப்பை மூத்த சமூகச் சேவை ஆர்வலரான அனிதா ஃபாம், 63, ஏற்கிறார்.
மூத்தோர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புச் சேவைகளை வழங்கும் தேசிய அமைப்பான ஏஐசிக்கு 2018ஆம் ஆண்டுமுதல் டாக்டர் ஈ தலைவராக இருந்து வருகிறார்.
அவரது தலைமையில், சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள்தொகையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைப்பின் பணிகளும் தாக்கமும் கணிசமாக விரிவடைந்தன எனத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) ஏஐசி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
எழுபது வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களைச் சென்றடைவதற்காகத் தொடங்கப்பட்ட முன்னோடித் தலைமுறை அலுவலகம், 2018ஆம் ஆண்டில் ஏஐசியுடன் இணைக்கப்பட்டது.
இந்த இணைப்பின் மூலம், உதவி தேவைப்படும் மூத்தோரைக் கண்டறிந்து, அவர்களைப் பொருத்தமான பராமரிப்பு, அரசாங்கத் திட்டங்களுடன் இணைக்கும் ஆற்றல் அமைப்பிற்கு அதிகரித்தது.
அமைப்பின் கூட்டுத் தலைமைத்துவத்தையும் பணியாளர் நிர்வாகக் கலாசாரத்தையும் வலுப்படுத்துவதில் டாக்டர் ஈ முக்கியப் பங்காற்றினார் என அவ்வறிக்கை குறிப்பிட்டது.
கணக்காளரான டாக்டர் ஈ, பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவர், அறநிறுவன மன்றத் தலைவர், தேசிய சமூக சேவை மன்றத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஏஐசியின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள வழக்கறிஞரான திருவாட்டி ஃபாம், தேசிய சமூக சேவை மன்றத்தில் தலைவராகப் பணியாற்றியவர். சமூக, சுகாதார, சமுதாயத் துறைகளில் அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவம் கொண்டவர்.
அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் தலைசிறந்த தொண்டூழியர், கொடையாளருக்கான அதிபர் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.


