சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் சனிக்கிழமை (ஏப்ரல் 26) தமது 85வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆக வயதான வேட்பாளர் திரு டான்தான்.
தெபான் கார்டன்ஸ் உணவு நிலையத்தில் நடைபெற்ற அக்கொண்டாட்டத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் பால் தம்பையா அவருக்கு கேக் தந்து வாழ்த்தினார்.
பால் தம்பையா புகழாரம்
“டாக்டர் டான் எங்கள் குடும்ப நண்பர். என் தந்தைக்கு நன்கு தெரிந்தவர். என் தந்தை மருத்துவ அதிகாரியாக இருந்தபோது அவருடன் டாக்டர் டான் மருத்துவப் பயிற்சி எடுத்துவந்தார் (houseman).
“தொடக்கத்திலேயே என் தந்தை என்னிடம் அவரைப் பற்றிப் பேசியபோது, ‘அவர் சொல்வதைக் கேள். சுகாதாரத் துறையில் என்ன நடக்கிறது என அவருக்கு அடித்தளத்திலிருந்து நன்றாகத் தெரிகிறது’ எனக் கூறினார்,” என்றார் டாக்டர் தம்பையா.
அதைத் தொடர்ந்து, தெக் வாய் சந்தையிலும் டாக்டர் டான் குடியிருப்பாளர்களைச் சந்தித்தபின் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். மனிதவள அமைச்சர் டான் சீ லெங் உள்ளிட்ட மக்கள் செயல் கட்சி சுவா சூ காங் குழுத்தொகுதி வேட்பாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திட்டங்களை ஆராய ஊக்குவிப்பு
மக்கள் செயல் கட்சி (மசெக) காட்டும் ஐந்தாண்டுத் திட்டங்களில், அது கட்சியாக ஆற்றும் பங்கை மக்கள் ஆராய வேண்டும் என்றார் டாக்டர் டான்.
“உங்களுக்குக் காண்பிக்கப்பட்ட கட்டடங்களை அமைப்பதற்கான நிதி மசெக கட்சியிலிருந்து வந்தால் நான் பாராட்டுவேன். ஆனால், ஒரு பெரிய மேம்பாலம், பெரிய சின்னத்தைக் கட்டுவதற்கான நிதி மக்களின் பணத்திலிருந்துதான் வருகிறது. நகர மறுசீரமைப்பு ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் போன்ற தேசிய அமைப்புகளுடன் இணைந்துதான் அவற்றைச் செயல்படுத்த முடியும்.
தொடர்புடைய செய்திகள்
“அரசாங்க அமைப்புகள் எப்படிச் செயல்படும் என எனக்குத் தெரியும். மக்களுக்கான நல்ல திட்டத்தை எதிர்க்கட்சி முன்வைத்தாலும் சரி, மசெக முன்வைத்தாலும் சரி, அதற்கு ஆதரவு கிடைக்கும்,” என்றார் அவர்.
“மசெக வெற்றிபெறாவிட்டாலும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா என நான் அவரையே கேட்கிறேன்,” என்றார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய்.
வெளிநாட்டவரின் தலையீடு
“எனக்குத் தெரிந்தவர்களில் பெரும்பாலும் யாரும் மலேசியாவின் ‘பிஏஎஸ்’ கட்சியின் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்ப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகச் சமூக ஊடக ‘போட்’கள் (bots) மீது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கூடுதல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
“ஒவ்வொரு முறை டாக்டர் சீ சூன் ஜுவான், ஹர்பிரீத் சிங், லியோங் மன் வாய் போன்ற பிரபல எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்யும்போதும் நண்பர்களே இல்லாத ஃபேஸ்புக் கணக்குகள் அவர்களைப் போலவே பதிவுசெய்கின்றன,” என்று டாக்டர் தம்பையா கூறினார்.
“முதன்முறை வாக்களிப்போர் இந்தத் தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளனர். கட்சிப் பிரசாரக் கூட்டங்களில் இணைந்து கட்சிகளின் கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்க ஊக்குவிக்கிறேன். ஏனெனில், அவர்கள் வாக்களிப்பது அவர்களின் எதிர்காலத்துக்காக,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்பாளர் ஒருவர், தமது மத்திய சேம நிதிக் கணக்கிலிருந்து பணத்தை மீட்கும் வயதை 60க்குக் குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
“மிகவும் வயதாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல விரும்புகிறேன். மசே நிதி பணம் முன்கூட்டியே கிடைத்தால் அதற்கு உதவும்,” என்றார் அவர்.